கூடுதல் ஊதியம் கேட்ட எலான் மஸ்க் :
Tesla Shareholders Approve Elon Musk Salary Pay Package : உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், தனக்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வேண்டும் என்று, டெஸ்லா பங்குதாரர்களிடம் கோரிக்கை விடுத்தார். இந்த அளவுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படா விட்டால், டெஸ்லாவில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
டெஸ்லா பங்குதாரர்கள் ஆலோசனை
இதையடுத்து, எலான் மஸ்க்கின் சம்பள விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஆஸ்டின் நகரத்திலுள்ள டெஸ்லா தொழிற்சாலையில் ஆண்டுக் கூட்டம் நடந்தது. அப்போது, டெஸ்லா நிறுவனத்தில் எலான் மஸ்க்கை தொடர்ந்து தக்க வைத்திருப்பது நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு நல்லது என்றும், அவர் வெளியேறினால் நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சி அடையக்கூடும் என்று டெஸ்லாவின் தலைவர் ராபின் டென்ஹோம் தெரிவித்தார். எனவே, எலான் மஸ்க்கின் சம்பள விவகாரத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
ஒரு டிரில்லியன் டாலர் ஊதியம்
இந்தக் கூட்டத்தில், அனைவரையும் வியக்கத்தக்க வகையில், எலான் மஸ்க்கிற்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வழங்க அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தனர். மொத்தம் உள்ள பங்குதாரர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தனர்.
அதேசமயம், இந்த ஊதியத்தை வழங்கிட எலான் மஸ்கிற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா நிறுவனம் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்தால், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும்.
88 லட்சம் கோடி சம்பளம்
இதன் மூலம் எலான் மஸ்க் தலைமையில் நிறுவனம் நீண்ட கால இலக்குகளை எட்டினால், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்புல் 88 லட்சம் கோடி) வரை சம்பளம் கிடைக்கும். உலகில் இதுவரை எந்தவொரு நபரும், இந்த அளவிலான மிகப்பெரிய ஊதிய தொகுப்பை(Elon Musk Salary Pay Package) பெற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பளம் வழங்கப்பட்டால், உலகின் முதல் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், உலகில் அதிக சம்பளம் நபராக கின்னசில் இடம் பிடிப்பார்.
7.5 ஆண்டுகள் டெஸ்லாவில் தொடர்வார்
டெஸ்லா நிறுவனத்திற்காக எலான் மஸ்கால் நிர்ணயிக்கப்பட்ட தொழில்நுட்ப இலக்குகளை தொடர, நீண்ட காலத்திற்கு அவரை நிறுவனத்தில் தக்கவைக்க இந்த பிரமாண்ட ஊதிய தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், டெஸ்லா நிறுவனத்தில், அடுத்து 7.5 ஆண்டுகள் எலான் மஸ்க் இருப்பார்.
டெஸ்லாவிற்கு மஸ்க் மிகவும் தேவை
ஏஐ மற்றும் ரோபாட்டிக்ஸ் துறைகளில் கடும் போட்டியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மஸ்க்கின் சேவையை டெஸ்லாவில் தொடர்வதை பங்குதாரர்கள் மிகவும் விரும்புகின்றனர் என்பதை, அவர்களின் ஒப்புதல் எடுத்துக்காட்டி உள்ளது.
சம்பளாக இல்லாமல் பங்குகளாக வழங்கப்படும்
எலான் மஸ்க்கிற்கு இந்தச் சம்பளம், பணமாக வழங்கப்படாது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நிறுவனத்தின் பங்குகளாக வழங்கப்படும். நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 1.5 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவில் உள்ளது. அதை 8.5 டிரில்லியன் டாலர்கள் ஆக உயர்த்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
=====