கிரெடிட் கார்டு கடன்கள் :
Gold Loan vs Credit Card Loan : இந்தியாவை பொருத்தவரை இதுவரை கடன்கள் என்று இருந்தால், அது கிரெடிட் கார்டு கடன்களாகவே இருந்து வந்தது. அவசர தேவை என்றால், கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்குவார்கள். வெளியூர்களுக்கு செல்ல, முக்கிய செலவுகளுக்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி அதற்குரிய பணத்தை படிப்படியாக செலுத்தி வாழ்வது தான் வாழ்க்கை என்ற நிலை இருந்து வந்தது.
தங்க நகைக் கடன்கள் அதிகரிப்பு :
ஆனால், கண்ணுக்கு தெரியாமல் கடந்த ஜூலை மாதம் முதல் இது படிப்படியாக, அதேசமயம் வேகமாக மாறத் தொடங்கி விட்டது. புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்கும் பொதுமக்கள், தங்கத்தின் விலையேற்றத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கினர். இதன் காரணமாக ஆகஸ்ட் மாதம் மட்டும் தங்க நகைகளை வைத்து, ரூ.3.06 லட்சம் கோடி அளவுக்குத் வங்கிகள் மூலம் கடன் பெறப்பட்டு இருக்கிறது. அதே சமயம், கிரெடிட் கார்டு கடன் ரூ.2.89 இலட்சம் கோடியாக இருந்தது.
உச்சத்தை தொட்ட தங்கம்
புதிதாக கிரெடிட் கார்டு வாங்குவதை விட தங்கத்தின் பெயரில் கடன் வாங்கி கொள்ளலாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். அதன் விளைவாக தங்கக் கடன்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 100 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. கடந்த 10 மாதங்களில் மட்டும் சவரனுக்கு 32 ஆயிரம் ரூபாய் அதிகரித்து விட்டது.
தங்க நகைக்கடன் பெறுவது எளிது :
தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவதும் எளிதான முறையாக இருக்கிறது. மற்றொரு முக்கிய காரணம், அதிக வட்டி கொண்ட கிரெடிட் கார்டு கடனை பெறுவதற்கு பதில், குறைந்த வட்டி கொண்ட தங்க நகைக்கடன்(Gold Loan vs Credit Card), மக்களுக்கு சுமையாக இல்லை. அதுமட்டுமின்று, நகைகளை மீட்டு மீண்டும் வைக்கும் போது கூடுதல் பணம் கிடைப்பது லாபகரமானதாக கருதப்படுகிறது.
நகைக்கடன் வழங்க வங்கிகள் ஆர்வம் :
தங்கம் அதிக மதிப்புமிக்கதாக இருப்பதால், நகைகளுக்கு வங்கிகள் அதிகப் பணத்தைக் கடனாக வழங்குகின்றன. இதுதான் தங்க நகைக்கடன் அதிகரிக்க காரணம். வங்கிகள் தங்கக் கடன்களை ஊக்குவிப்பதால், வாடிக்கையாளர்கள் அதன் மூலம் பணம் பெற ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக தங்க நடைக்கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனங்கள் சில ஆண்டுகளாக அபார வளர்ச்சி பெற்று வருகின்றன. இதை கவனத்தில் கொண்டு, வங்கிகள் தங்க நகைக் கடன்களில் கவனம் செலுத்துகின்றன.
மேலும் படிக்க : தாறுமாறாக உயரும் தங்கம் விலை : போட்டி போட்டு உச்சம் தொடும் வெள்ளி
85 சதவீதம் வரை பணம் கிடைக்கிறது :
இதில் தங்க நகைக் கடனை ரிசர்வ் வங்கி எளிமையாக்கியது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. சிறிய தங்கக் கடன்களுக்கான கடன்மதிப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. அதன்படி, ரூ.2.5 இலட்சம் வரையிலான கடன்களுக்கு, கடன் வாங்குபவர்கள் தங்கத்தின் மதிப்பில் 85% வரை பெறலாம். இதற்கு முன்பு அது 75% ஆக மட்டுமே இருந்தது. இதுவும் தங்க நகைக்கடன்(RBI Percentage on Gold Loan) அதிகரிக்க முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கிரெடிட் கார்டு கடன்களை விட, தங்க நகைக்கடன்கள் அதிகரித்து காணப்படுகிறது
========