GST collections in August have set a record by crossing the ₹2 lakh crore mark AI generated
வணிகம்

ஆகஸ்டில் “GST வசூல் 2 லட்சம் கோடி” : 14% அதிகரிப்பு, வலுவான நிலையில் பொருளாதாரம் : தமிழ்நாட்டில் வசூல் குறைவு..!

ஆகஸ்டு மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ. 2 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்து இருக்கிறது.

Kannan

ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சம்

GST Collections இந்திய அரசின் மறைமுக வரி வசூலுக்கு ஊக்கமளிக்கும் வகையில், 2026 ஆகஸ்ட் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் ஆண்டு அடிப்படையில் 14.8 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2026 ஆகஸ்ட் மாதம் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.99 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

வரி வசூலின் முக்கிய அம்சங்கள்

உள்நாட்டு மற்றும் இறக்குமதி வருவாய் : வரித் திரும்பப் பெறுதல் (Refunds) கணிசமாக அதிகரித்த போதிலும், உள்நாட்டு மற்றும் இறக்குமதி வருவாய் அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். இதனால் நிகர வசூல் 8.3 % வளர்ச்சி கண்டுள்ளது.

உள்நாட்டு வர்த்தகம் : உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் மூலமான ஜிஎஸ்டி வருவாய் 9.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.37 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

இறக்குமதி வருவாய் : இறக்குமதி மூலமான மொத்த ஜிஎஸ்டி வருவாய் 29 சதவீதம் அதிகரித்து ரூ.62,604 கோடியாக உயர்ந்துள்ளது.

வரி ரீஃபண்ட், பிற விவரங்கள்

வரி ரீஃபனண்ட 68 சதவீதம் அதிகரித்து ரூ.31,795 கோடியை எட்டியுள்ளது. அதே நேரத்தில், நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 8.3 சதவீத வளர்ச்சியாகும்.

ஆகஸ்ட் மாதத்தில் மொத்த மத்திய ஜிஎஸ்டி (CGST) வசூல் ரூ.38,413 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி (SGST) வசூல் ரூ.46,316 கோடியாகவும் இருந்தது.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) வசூல் ரூ.1.15 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் நம் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ. 10.42 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

வலுவான 14.8 சதவீத வளர்ச்சி என்பது, முதல் காலாண்டில் பதிவாகியுள்ள 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சியுடன் சேர்ந்து கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயத்தன்மைக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் வலிமையாக உள்ளதை இது கூட்டாகக் காட்டுகிறது.

மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி வசூல்

மாநிலங்களின் ஜிஎஸ்டி வரி வசூலைப் பொறுத்தவரையில், மகாராஷ்டிர மாநிலத்தின் வசூல் 8 சதவீதம் அதிகரித்து ரூ. 28,779 கோடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடகா 13 சதவீதம் அதிகரித்து ரூ. 14,148 கோடியாகவும்,

குஜராத்தின் வசூல் 15 சதவீதம் அதிகரித்து ரூ. 12,047 கோடியாகவும்,

உத்தரப் பிரதேசம் 19 சதவீதம் அதிகரித்து ரூ. 9,092 கோடியாகவும் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு ஜிஎஸ்டி வசூலில் வீழ்ச்சி

மறுபுறம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வசூலில் சிறிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதாவது தமிழ்நாட்டில் வசூல் 1 சதவீதம் குறைந்து ரூ. 10,189 கோடியாகவும், ராஜஸ்தானில் 2 சதவீதம் குறைந்து ரூ. 4,148 கோடியாகவும், ஒடிசாவில் வசூல் 7 சதவீதம் குறைந்து ரூ. 3,895 கோடியாகவும் சரிந்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

இந்தநிலையில், 57ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 12ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

===============