சவரன் தங்க பத்திரமே சிறந்த முதலீடு
sgb gold bond தங்கத்துல முதலீடு செய்ய நினைத்தால், அப்போ சவரன் தங்கப் பத்திரம் (SGB) ஒரு நல்ல முடிவு. 2019-ல் போட்ட ஒரு லட்சம் ரூபாய் இப்போ 4.7 லட்சமா வளர்ந்திருக்கு. வெறும் விலை உயர்வு மட்டும் இல்லாம, வருஷத்துக்கு 2.5% வட்டியும் கிடைக்குது. 5 வருஷம் கழிச்சு பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
தங்கப்பத்திரமே சிறந்த முதலீடு
இது ஒரு பாதுகாப்பான, லாபகரமான முதலீடு, இந்தியாவில் தங்க முதலீட்டிற்கு பாதுகாப்பான மற்றும் லாபகரமான வழியாக சவரன் தங்கப் பத்திரம் (Sovereign Gold Bond – SGB) நீண்ட காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக 2018–19 தொடர்களில் முதலீடு செய்தவர்களுக்கு, இந்தத் திட்டம் மிகப் பெரிய வருமானத்தை வழங்கியுள்ளது.
சவரன் தங்கப் பத்திரத்தின் விலை உயர்வு
இந்திய ரிசர்வ் வங்கி 2019 ஆம் ஆண்டு இந்தப் பத்திரங்களை வெளியிட்டபோது, ஒரு யூனிட்டின் விலை சுமார் ரூ.3,214 ஆக இருந்தது. தற்போது, இந்தப் பத்திரத்தின் மீட்பு விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.14,853 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு விலை, ஜனவரி 19, 20 மற்றும் 21, 2026 ஆகிய மூன்று வர்த்தக நாட்களின் 999 தூய தங்கத்தின் சராசரி சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டை இந்தியா புல்லியன் மற்றும் நகைக்கடையாளர்கள் சங்கம் (IBJA) வெளியிட்டுள்ளது.
ரூ.1 லட்சம் முதலீட்டின் இன்றைய மதிப்பு
2019 ஆம் ஆண்டு சவரன் தங்கப் பத்திரங்களில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.4.7 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் 3 முதல் 4 மடங்கு வரை வருமானம் பெற்றுள்ளனர். விலை உயர்வை மட்டும் கணக்கில் எடுத்தாலும், இந்த முதலீடு மிகச் சிறந்த லாபத்தை வழங்கியுள்ளது.
விலை உயர்வுடன் கூடுதல் வட்டி வருமானம்
சவரன் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி தொகை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் முதலீட்டாளரின் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால், தங்கத்தின் விலை உயர்வுடன் கூட வட்டி வருமானமும் சேர்ந்து முதலீட்டின் மொத்த லாபத்தை மேலும் அதிகரிக்கிறது. இதன்மூலம் தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள், வட்டியின் மூலம் பெருமளவு லாபத்தை ஈட்ட முடியும்.
முன்கூட்டியே மீட்பு வசதி
சவரன் தங்கப் பத்திரங்களுக்கு 8 ஆண்டுகள் முதிர்வு காலம் இருந்தாலும், வெளியிடப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த பிறகு முன்கூட்டியே மீட்கும் வசதி உள்ளது. அக்டோபர் 8, 2018 அன்று அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பின்படி, வட்டி செலுத்தும் தேதிகளில் முதலீட்டாளர்கள் தங்களுடைய பத்திரங்களை முன்கூட்டியே மீட்க முடியும். மீட்பு தொகை நேரடியாக முதலீட்டாளரின் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் என்ற நடைமுறை தற்போது வரை உள்ளது.
இன்றைய நிலவரத்தில் தங்க முதலீடு
இந்நிலையில், தற்போதைய தங்க நிலவரப்படி தங்கத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆபரணத்தங்கம் முதல் கட்டி தங்கம் என எதையும் சிந்திக்கும் நிலையில் இல்லை. இந்த சூழலில், தங்கப்பத்திரமே சிறந்த முதலீடு மற்றும் சேமிப்பு. எனவே, நடுத்தர வாசிகள் முதல் நகைபிரியர்கள் வரை தங்கப்பத்திர திட்டத்தை அணுகுவது இன்றை தங்க விலை நிலவரத்திற்கு, நாளை அது பெரும் மதிப்பீடாக மாறும் என்பது இன்றியமையாதது.