இந்தியா உணவு உற்பத்தி
India Record in Food Grain Production 2025 : இந்தியாவில் பல்வேறு விதமான தானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. இவை நமது நாட்டின் தேவைக்கு போக, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, வருவாய் ஈட்டப்படுகிறது. இந்தியாவின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள், தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு சாதித்து வருகிறார்கள்.
தானிய உற்பத்தியில் புதிய சாதனை
இந்தநிலையில், மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, 2024-25 ஆண்டில் நெல்,கோதுமை, சோயாபீன்ஸ், நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்களின் உற்பத்தி சாதனை அளவாக 357.32 மில்லியன் டன்னை தொட்டுள்ளது.
நெல் உற்பத்தியில் சாதனை
இது, முந்தைய 2023-24 உணவு தானிய உற்பத்தியான 332.29 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 7.65 சதவீதம் அதிகமாகும். 2024-25 காரீப் பருவத்தில் நெல் உற்பத்தி 122.77 மில்லியன் டன்னை எட்டி சாதனை படைத்துள்ளது. இது, முந்தைய ஆண்டு உற்பத்தியான 113.25 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 8.39 சதவீதம் அதிகமாகும்.
கோதுமை விளைச்சலும் அமோகம்
இதேகாலத்தில் கோதுமை 117.94 மில்லியன் டன், சோயாபீன்ஸ் 15.26 மில்லியன் டன், நிலக்கடலை 11.9 மில்லியன் டன் உற்பத்தியாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தானிய உற்பத்தி அதிகரித்து இருப்பதால், விவசாயிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும், பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் உணவு தானியங்கள் விற்பனைக்கு வரும். ஏற்றுமதியும் அதிகரித்து வருவாய் உயரும்.
==========