ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு
Indian Rupee Falls To 91 Against US Dollar Today : அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. அமெரிக்கா-இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் நீடிக்கும் இழுபறி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து பங்குகளை விற்று வெளியேறுவது ஆகியவை காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.
91 ரூபாயாக சரிந்த மதிப்பு
இந்திய ரூபாய் செவ்வாய்க்கிழமை முதல்முறையாக ஒரு டாலருக்கு 91 ரூபாய் என்ற எல்லையை தாண்டியது. காலை வர்த்தகம் தொடங்கியதும், 0.3% சரிந்து 91.0750 ஐ எட்டியது. கடந்த 3ம் தேதி 90 ரூபாயை முதன்முறையாக கடந்தது.
பேச்சுவார்த்தை முடிந்தால் ஏற்றம்
2025ம் ஆண்டில் டாலருக்கு எதிராக ரூபாய் இதுவரை 6%க்கும் மேல் சரிந்துள்ளது, இதனால் வளர்ந்து வரும் சந்தை நாணயங்களில் இந்திய ரூபாயின் செயல்திறன் குறைவாகவே காணப்படுகிறது. அமெரிக்கா-இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஒரு திருப்புமுனை ஏற்படாத வரை ரூபாயின் தலைகீழ் மாற்றம் சாத்தியமில்லை என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்
மே மாதத்தில் 83.77 என்ற நிலையில் இருந்து ரூபாயின் மதிப்பு 8.5%க்கும் மேல் சரிந்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான வரிவிதிப்பால் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பாதிக்கப்பட, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளிலிருந்து நிகர $18 பில்லியனுக்கும் அதிகமாக விற்பனை செய்துள்ளனர். இது எக்காலத்திலும் இல்லாத மிகப்பெரிய வருடாந்திர வெளியேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால், பெட்ரோல், டீசல் போன்ற இறக்குமதிப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
====