Tamil cinema half year box office 2026. Ai generated
சினிமா

கோலிவுட்டில் 6 மாதங்களில் 118 படங்கள்: 6 மட்டுமே ஹிட்: பின்னடைவை சந்திக்கிறதா தமிழ் சினிமா?

2026-ன் முதல் 6 மாதங்களில் வெளியான 118 தமிழ் படங்களில் 6 படங்கள் மட்டுமே லாபம் தந்துள்ளன. முழு வசூல் நிலவரம் இதோ.

Kavitha prasanna

Tamil cinema half year box office 2026: கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் தமிழ் சினிமாவில் தியேட்டர்களில் வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை 279. அந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 124 படங்கள் ரிலீசாகியிருந்தன.

அப்படியெனில் 2025 ஆம் ஆண்டுடன் இந்த ஆண்டை ஒப்பிடுகையில், முதல் ஆறு மாதங்களில் சுமார் 118 படங்கள் வெளியாகியுள்ளன.

உச்ச நடிகர்களின் படங்கள் இல்லாத நிலை

கடந்த ஆறு மாதங்களில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் ஆகிய முன்னணி டாப் நட்சத்திரங்களின் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை.

அடுத்த ஆறு மாதங்களில் ரஜினியின் 'ஜெயிலர் 2' மற்றும் விஜய்யின் 'ஜனநாயகன்' ஆகிய படங்கள் மட்டுமே வெளியாகவுள்ளன. கமலஹாசன் மற்றும் அஜித் படங்கள் இந்த ஆண்டில் வெளியாக வாய்ப்பில்லை.

சூர்யாவின் வரலாற்று சாதனை

உச்ச நடிகர்களை அடுத்து, அடுத்த வரிசையில் உள்ள சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி ஆகியோரது படங்கள் வெளியாகின.

அதன்படி சூர்யா நடித்து வெளியான 'கருப்பு' திரைப்படம் கடந்த வருடமே வெளியாக வேண்டியது, ஆனால் தள்ளிப்போய் இந்த ஆண்டில்தான் ரிலீசானது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.190 கோடி வசூலித்ததோடு, தெலுங்கு டப்பிங்கிலும் நல்ல லாபத்தைத் தந்தது.

இந்த ஆண்டில் தமிழில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்றதோடு, சூர்யா தனது 25 ஆண்டுகால சினிமா பயணத்தில் முதன்முறையாக ரூ. 300 கோடி கிளப்பில் இணைந்த திரைப்படமாகவும் இது அமைந்தது.

ஏமாற்றமும் பெரும் நஷ்டமும்

முன்னணி ஹீரோக்களின் சில படங்கள் இந்த ஆறு மாதங்களில் வணிக ரீதியாக பலத்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

தனுஷ் நடித்து வெளிவந்த 'கர' மற்றும் கார்த்தி நடித்து வெளிவந்த 'வா வாத்தியார்' ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியைத் தழுவின.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த 'பராசக்தி' திரைப்படம் ரூ. 100 கோடி வசூலைக் கடந்ததாகக் கூறப்பட்டாலும், பட்ஜெட் மற்றும் வசூல் ரீதியாக இப்படம் நஷ்டத்தையே கொடுத்துள்ளது.

ஹிட் கொடுத்த சிறிய பட்ஜெட் படங்கள்

பெரிய படங்கள் ஏமாற்றிய நிலையில், யாரும் எதிர்பாராத சில சிறிய பட்ஜெட்டில் உருவான படங்கள் தங்களின் கதையமைப்பால் ரசிகர்களைக் கவர்ந்து லாபத்தை வாரிக் குவித்தன.

ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில்

விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 9 அன்று வராததால், திடீரென பொங்கல் போட்டியில் இந்த படம் குதித்தது.

இரண்டே வீடுகளைச் சுற்றிச் சுற்றி வந்து போன நகைச்சுவையான திரைக்கதையால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாகவும் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றது. இப்படம் நடிகர் ஜீவாவிற்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

வித் லவ் திரைப்படம்

'டூரிஸ்ட் பேமிலி' (2025) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், பிப்ரவரியில் வெளியான படம்.

அவர் கதாநாயகனாகவும் அறிமுகமான இத்திரைப்படம், இளம் ரசிகர்களின் பேராதரவோடு பாக்ஸ் ஆபீஸில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூலித்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.

தாய் கிழவி திரைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு சீனியர் நடிகை முதன்மைப் பாத்திரத்தில், அதுவும் 'கிழவி' கதாபாத்திரத்தில் நடித்து இப்படி ஒரு வெற்றியைப் பெறும் என்று யாரும் கணிக்கவில்லை.

ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான இப்படம் ரூ. 90 கோடி வசூலித்து சாதனை படைத்தது. சினிமாவுக்கு ஹீரோயிசமும் கிளாமரும் தேவையில்லை, நல்ல கதை இருந்தால் எந்த வயதினரின் கதாபாத்திரமும் ஜெயிக்கும் என்பதை நிரூபித்தது.

யூத் திரைப்படம்

இளம் படைப்பாளிகளின் வரவை உறுதி செய்த படம். கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகி, கதாநாயகனாகவும் நடித்த இத்திரைப்படம், தலைப்பைப் போலவே யூத் ரசிகர்களைக் கவர்ந்து ரூ. 80 கோடி வசூலுடன் மாபெரும் வெற்றி பெற்றது.

பிளாஸ்ட் திரைப்படம்

'குடும்பத்தைச் சுற்றிய ஆக்ஷன்' கதையாக இது உருவானது. அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், பிரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம், திரைக்கதையால் ரசிகர்களைக் கவர்ந்து ரூ. 75 கோடி வசூலித்தது.

விமர்சன ரீதியான பாராட்டு பெறும் திரைப்படங்கள்

வசூலில் பெரிய சாதனை செய்யாவிட்டாலும், திரையுலகினராலும் விமர்சகர்களாலும் 'ஹாப்பி ராஜ் , நூறு சாமி' உள்ளிட்ட சில படங்கள் நல்ல பாராட்டைப் பெற்றன.

அதேபோல், வசனங்களே இல்லாமல் விஜய் சேதுபதி நடித்து வெளியான 'காந்தி டாக்ஸ்' திரைப்படம், ரசிகர்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்க்கத் தவறியதால் வணிக ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்தது.

லாபம் தந்த படங்கள் மற்றும் வசூல் விவரம்

2026-ன் கடந்த ஆறு மாதங்களில் வெளியான 118 படங்களில் ஒட்டுமொத்தமாக ரூ. 1000 கோடி வசூலாகியுள்ளது. ஆனால், அவற்றிற்கான தயாரிப்பு பட்ஜெட்டும் அதே ரூ. 1000 கோடி வரை செலவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தப் படங்களில் வெறும் 6 படங்கள் மட்டுமே லாபத்தைத் தந்துள்ளன என்பது மிகமிகக் குறைவான ஒன்றாகும்.

லாபம் ஈட்டிய அந்த 6 முக்கிய படங்களின் வசூல் விவரம்

  1. கருப்பு - ரூ.340 கோடிக்கும் மேல்

  2. தாய் கிழவி -ரூ.90 கோடி

  3. யூத் - ரூ.80 கோடி

  4. பிளாஸ்ட் - ரூ.75 கோடி

  5. தலைவர் தம்பி தலைமையில் - ரூ.40 கோடிக்கும் மேல்

  6. வித் லவ் - ரூ.40 கோடிக்கும் மேல்

ஏமாற்றத்தைத் தந்த படங்கள்

ஆர்யாவின் 'மிஸ்டர் எக்ஸ்', பரத்தின் 'காளிதாஸ் 2', பிரதீப் ரங்கநாதனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ஆகிய படங்கள் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ஏமாற்றமளித்த படங்களாக அமைந்தன.

======