Actor Kamal Haasan stressed need for change in the process of issuing censor certificates ahead of Parasakthi Jana Nayagan Issue Google
சினிமா

”தணிக்கை சான்றிதழ்” நடைமுறையில் மாற்றம் தேவை : கமல்ஹாசன் யோசனை

Actor Kamal Haasan on Censor Board Certificate Issue : தணிக்கை சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றம் தேவை என நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

Kannan

தணிக்கை பிரச்சினையில் ’ஜனநாயகன்’

Actor Kamal Haasan on Censor Board Certificate Issue : நடிகர் விஜய் நடித்து நேற்று வெளியாக இருந்த ஜனநாயகன் திரைப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக வெளியாகாமல் போனது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 21ம் தேதி பிறகே வழக்கு விசாரணைக்கு வருகிறது.

சட்டப் போராட்டம் நடத்திய ‘பராசக்தி’

இதேபோன்று, சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படமும், நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு சென்சார் அனுமதி கிடைத்து இன்று வெளியாகி இருக்கிறது. தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டு வருகிறது.

தணிக்கை பிரச்சினை - கமல் அழுத்தம்

இந்தநிலையில், தணிக்கை வாரிய பிரச்சினை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், “தற்போதைய சூழல் ஒரு குறிப்பிட்ட படத்துக்கானது மட்டுமல்ல. பல்வேறு கலைஞர்களின் வாழ்வாதாரம் என்பதால் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் நேர்மையான மற்றும் காலக்கெடுவுடன் கூடிய நடைமுறை தேவை.

கருத்து சுதந்திரம் - நமது உரிமை

"இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது; அது பகுத்தறிவால் வழிநடத்தப்பட வேண்டுமே தவிர, ஒருபோதும் தெளிவற்ற தன்மையால் (Opacity) முடக்கப்படக்கூடாது. இந்தத் தருணம் ஏதோ ஒரு தனிப்பட்ட திரைப்படத்தைப் பற்றியது மட்டுமல்ல; ஒரு அரசியலமைப்பு ஜனநாயகத்தில், கலைக்கும் கலைஞர்களுக்கும் நாம் அளிக்கும் இடத்தைப் பிரதிபலிக்கிறது.

சினிமா என்பது கூட்டு முயற்சி

சினிமா என்பது ஒரு தனிமனிதனின் உழைப்பு மட்டுமல்ல; அது எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பல சிறு வணிகர்களின் கூட்டு முயற்சியாகும். இவர்களின் வாழ்வாதாரம் ஒரு நேர்மையான மற்றும் காலதாமதமற்ற செயல்முறையைச் சார்ந்தே இருக்கிறது.

கலைஞர்களுக்கு மரியாதை தேவை

தெளிவு இல்லாதபோது, படைப்பாற்றல் முடக்கப்படுகிறது, பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன, மேலும் பொதுமக்களின் நம்பிக்கையும் பலவீனமடைகிறது. தமிழ்நாட்டின் மற்றும் இந்தியாவின் சினிமா ஆர்வலர்கள் கலை மீது மிகுந்த ஆர்வமும், விவேகமும், முதிர்ச்சியும் கொண்டவர்கள்; அவர்களுக்குத் தேவை வெளிப்படைத்தன்மையும் மரியாதையும் ஆகும்.

தணிக்கை முறையில் மாற்றம் அவசியம்

தற்போது நமக்குத் தேவையானது, தணிக்கை முறைகளில் ஒரு கொள்கை ரீதியான மறுபரிசீலனை ஆகும். தணிக்கைக்கான காலக்கெடுவை வரையறுத்தல், வெளிப்படையான மதிப்பீடு மற்றும் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு வெட்டு (Cut) அல்லது மாற்றத்திற்கும் எழுத்துப்பூர்வமான, தர்க்கரீதியான காரணங்களை முன்வைத்தல் ஆகியவை அவசியமாகும்.

திரைத்துறை கைகோர்க்க வேண்டும்

திரைப்படத்துறை முழுமையாக ஒன்றிணைந்து, அரசு நிறுவனங்களுடன் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான தருணமும் இதுவே.

இத்தகைய சீர்திருத்தம் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதோடு, அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்தும்.

மேலும், கலைஞர்கள் மற்றும் மக்களின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை இது வலுப்படுத்தும்" என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

====