சோதனையின்போது சிக்கிய தந்தம்
Actor Mohanlal Elephant Tusk Case : கேரள மாநிலம் கொச்சியின் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் இரண்டு ஜோடி யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்திருந்ததாக வனத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது. தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை வைத்தார். இதையடுத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட் மோகன்லாலுக்கு 2015ம் ஆண்டு யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கு உரிமம் கேரள அரசால் வழங்கப்பட்டது இதைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட தந்தங்களும் மோகன்லாலிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து வழக்கில் சிக்கிய மோகன்லால்
பின்னர், மாநில அரசு அவர் மீதான வழக்கை திரும்ப பெற முயன்றபோது பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த முடிவை நிராகரித்தது. கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மோகன்லால் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.அதேசமயம், ஜேம்ஸ் மேத்யூ என்ற மற்றொரு நபர் யானை தந்தங்களை வைத்திருந்ததற்காக மோகன்லால் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
உயர்நீதிமன்றம் விசாரணை
இந்த மனுக்களை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, மோகன்லால் யானை தந்தங்களை வைத்துக்கொள்ள மோகன்லாலுக்கு மாநில அரசால் வழங்கப்பட்ட உரிமம் சட்டபூர்வமானது அல்ல என கூறி அதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2015 ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த உத்தரவில் நடைமுறை பிழைகள் இருகின்றன என கூறி அது செல்லாது என உயர்நீதிமன்றம்தீர்ப்பளித்தது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பான விஷயங்களில் அரசுகள் விதிகளின்படி செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கேரள அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும் படிக்க : வசூலில் உச்சம் தொட்ட காந்தாரா-தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை!
மோகன்லால் மேல்முறையீடு
மோகன்லால் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்டும் நிலையில், மீண்டும் தந்தம் இவரிடம் வருமா, அல்லது அவரிடம் இருந்து முழுவதுமாக அரசால் கைப்பற்றப்படுமா(Mohanlal Ivory Ownership) என கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தொடர்ந்து கேரள நடிகர்கள் பல்வேறு சிக்கல்களில் சிக்கி வருகின்றனர் என நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.