வில்லனாக மோகன்லால் :
மலையாள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர் மோகன்லால். நடிகர் ரஜினிகாந்தை போன்று வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் நாயகனாக கோலோச்சியவர். எதிர்மறை கதாபாத்திரத்தில் அறிமுகமானாலும், சினிமா என்பது ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் வாழ்க்கையாக வாழ்ந்து வருகிறார் மோகன்லால்.
350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் :
மோகன்லால் நாயகனாக நடிக்க 1978ல் உருவான ’திரனோட்டம்’ வெளியாகாத நிலையில், 1980 ஃபாசில் இயக்கத்தில் வெளியான ’மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ படத்தில் வில்லனாக அறிமுகமானார். அன்று தொடங்கிய திரைப்பயணம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடிகனாக, பாடகராக, தயாரிப்பாளராக மோகன்லால் உச்சம் தொட்டு இருக்கிறார்.
த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால் :
மோகன்லாலின் நடிப்புக்கு ஏற்ற படங்களில் ஒன்று மணிரத்னம் இயக்கிய இருவர். இதேபோல, தமிழில், கோபுர வாசலிலே, சிறைச்சாலை, விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2013ல் வெளியான த்ரிஷ்யம் அவரது திரைப்பயணத்தில் உச்ச நடிப்பை வெளிப்படுத்தியது.
கோடிகளை குவித்த மோகன்லால் படங்கள் :
கேரள சினிமாவில் 100 கோடி வசூல் என்பது மோகன்லால் படத்தில் இருந்துதான் தொடங்கியது. அந்தப் படம் ’புலி முருகன்’. இதேபோன்று 2019ல் வெளியான ''லூசிஃபர்'' திரைப்படம் மலையாளத்தின் முதல் 200 கோடி வசூலை எட்டியது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை குவித்துள்ள மோகன்லாலுக்கு மத்திய அரசு, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகளை தந்து கெளரவித்து இருக்கிறது.
மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது :
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் நாளை நடைபெறும் 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் அவருக்கு விருது வழங்கப்படுகிறது.
மோகன்லாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து :
மோகன் லாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பன்முகத் திறன்கொண்ட அவர், தனித்துவமான கலைப் பயணத்தின் மூலம் கேரள கலாசாரத்தில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாக பாராட்டி இருக்கிறார்.
பிரதமர் மோடிக்கு மோகன்லால் நன்றி :
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள மோகன் லால், தாதா சாகேப் பால்கே விருது பெறுவதை எண்ணி பெருமை கொள்வதாகவும், தனது கலைப் பயணத்தை ஒளிரச் செய்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் திரையுலகினர் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
===================