Albert Theatre Chennai Permanent Closure Egmore Rajini Fans Fort
நிரந்தரமாக மூடப்பட்டு விற்பனைக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கம்
தமிழ் சினிமாவின் வளர்ச்சியிலும், ரசிகர்களின் கொண்டாட்டங்களிலும் முக்கியப் பங்கு வகித்த சென்னை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட உள்ளதாகவும், அந்த இடம் விற்பனைக்கு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல தசாப்தங்களாக ஆல்பர்ட் மற்றும் பேபி ஆல்பர்ட் என இரண்டு திரைகளுடன் செயல்பட்டு வந்த இந்த பாரம்பரியத் திரையரங்கம் மூடப்படுவது சினிமா ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் ரசிகர்களின் கோட்டை
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் திரையரங்குகள் குறைவுதான் என்றாலும், ஒரு காலகட்டத்தின் பொழுதுபோக்கு அடையாளமாகத் திகழ்ந்த திரையரங்குகளில் எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டருக்குத என்று தனி இடம் உண்டு.
பாட்ஷா, படையப்பா சாதனை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆஸ்தான திரையரங்குகளில் ஒன்றாகத் திகழ்ந்த இங்கு, 'பாட்ஷா' மற்றும் 'படையப்பா' ஆகிய திரைப்படங்கள் அதிக நாட்கள் காட்சிப்படுத்தப்பட்டு மாபெரும் வசூல் சாதனை படைத்தன.
ஆல்பர்ட் திரையரங்கும் ரசிகர்களின் நம்பிக்கையும்
அதுமட்டுமின்றி ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சி திருவிழா போல களைகட்டும்.
அடுத்தடுத்து தமிழ் சினிமாவிற்கு வந்த பல நடிகர்களுக்கும், ஆல்பர்ட் திரையரங்கில் கூட்டம் அலைமோதினால் அந்தத் திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் நிலவியது.
மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு ஏன்?
லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் அதிகமான மறக்க முடியாத நினைவுகளைக் கொடுத்த இந்தத் திரையரங்கம் திடீரென மூடப்படுவதால், வேறு ஏதாவது திரையரங்க உரிமையாளர்கள் இதனைக் கைப்பற்றி நவீனப்படுத்தி மீண்டும் திரைப்படங்களை வெளியிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
திரைத்துறை வட்டாரத் தகவல்
ஆனால், ஆல்பர்ட் திரையரங்கிற்கு மிக அருகில் அமைந்துள்ள பெரிய டாஸ்மாக் (TASMAC) கடையாலும், அங்கு மது அருந்திவிட்டுத் திரையரங்கிற்குள் வரும் சில கூட்டத்தினரால் ஏற்படும் இடையூறுகளாலும், மல்டிபிளக்ஸ் அரங்குகளின் போட்டியாலும், இத்திரையரங்கை மீண்டும் திரையரங்கமாக நடத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதயம், சஃபையர் வரிசையில் ஆல்பர்ட்?
ஏற்கனவே சென்னையின் அடையாளங்களாக இருந்த உதயம், சஃபையர், தியாகராஜா போன்ற திரையரங்குகள் காலப்போக்கில் மூடப்பட்ட நிலையில், தற்போது ஆல்பர்ட் திரையரங்கமும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
=============