ரன்வீர் சிங்கின் ’துரந்தர்’
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. வெளியாகி 18 நாட்கள் ஆகும் நிலையில், இந்திய அளவில் மட்டும் ரூ.700 கோடியை கடந்துள்ளது வசூல்.
தியேட்டர்களில் குவியும் ரசிகர்கள்
முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பாராட்டு குவிந்து வருவதால், திரையரங்குகளில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
உலக அளவில் அதிக வசூல்
இதன் காரணமாக, 2025ம் ஆண்டில், உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற மாபெரும் சாதனையை ‘துரந்தர்’ நிகழ்த்தியிருக்கிறது. முதல் இடத்தில் இருந்த ‘காந்தாரா - சாப்டர் 1’ படத்தின் வசூலை முறியடித்திருக்கிறது.
’துரந்தர்’ 900 கோடி வசூல்
இதுவரை உலகளவில் மொத்த வசூலில் ரூ.900 கோடியை கடந்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ’துரந்தர்’ ஸ்பை த்ரில்லர் வகை படமாகும். உளவு அதிகாரியை பற்றிய கதயைக் கொண்டது.
உளவாளியாக ரன்வீர் சிங்
1999-ம் ஆண்டு கந்தகரில் இந்திய விமானம் கடத்தப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் டெல்லி நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்க, ஹம்சா என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் உளவாளியாகச் செல்லும் ரன்வீர் சிங் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களைக் கண்டுபிடித்து அவற்றை எப்படி முறியடிக்கிறார் என்பது தான் ’துரந்தர்’ கதை.
ஆதித்யா தார் இயக்கம்
'உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' படத்தின் மூலம் கவனம் பெற்ற பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாஸ்வத் சச்தேவ் இசையமைத்திருக்கிறார்.
கதாநாயகியாக சாரா அறிமுகம்
'தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமின் மகளாக நடித்து அனைவரின் கவனம் ஈர்த்த சாரா அர்ஜுன் ‘துரந்தர்’ இந்த படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருப்பதுடன், பாலிவுட் திரையுலகில் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
எதிர்மறை விமர்சனம் - வசூலில் சாதனை
பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், மத மோதலை தூண்டுவதாக வெளியான விமர்சனத்தால் 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், உலக அளவில் வசூல் சாதனையும் படைத்து வருகிறது. டிசம்பர் 31ம் தேதிக்குள் ‘துரந்தர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.1,000 கோடி வசூலை கடக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.