Director H Vinoth Interview Jana Nayagan Release Date July 23 Vijay Movie
இயக்குநர் H. வினோத் இயக்கத்தில், முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ தணிக்கைப் பிரச்னை, இணையத்தில் கசிவு என பல தடைகளைத் தாண்டி தற்போது, வரும் ஜூலை 23-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
நடிகரும், முதல்வருமான விஜய்யின் கடைசி படம்
விஜய்யின் கடைசி படம் என்பதால் உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குநர் H.வினோத் அளித்துள்ள நேர்காணலில் பல முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“சென்சார் போர்டு மாற்றங்களை ஏற்கவில்லை” – H. வெளிப்படை
"ஜன நாயகன் திரைப்படம் கசிந்ததற்குப் பிறகு இப்போது திரையரங்குகளில் வெளியாகும் வடிவத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. காரணம், சென்சார் தரப்பிலிருந்தே மாற்றங்களை செய்யக் கூடாது எனக் கூறிவிட்டனர். இருப்பினும், புதிதாக தெரிந்துகொள்வதற்கான சின்னச் சின்ன விஷயங்கள் இதில் இருக்கின்றன.
படம் கசிந்தது குறித்தும் திரையரங்கு ரிலீஸ் வடிவம் குறித்தும் பேசிய H. வினோத்
எனக்குத் தெரிந்தவரை நிறைய பேர் இப்படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டனர். அவர்கள் மீண்டும் திரையரங்கிற்கு வருவார்களா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது" என்றார்.
ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துப் பேசிய இயக்குநர் H. வினோத்
மேலும் இது வெறும் கமர்சியல் திரைப்படமோ அல்லது தவெக கட்சியைப் புகழும் திரைப்படமோ அல்ல. ஒரு நல்ல அரசியலைப் பேசும் படம். அதனால், ரசிகர்கள் இணையத்தில் பார்த்திருந்தாலும் திரையரங்குகளுக்கு வந்து பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார்.
‘ஏ’ சான்றிதழ் கிடைத்ததில் வருத்தம்
"இத்திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் (A certificate) கிடைத்தது எனக்கு மட்டுமல்ல, விஜய் சார் மற்றும் தயாரிப்பாளருக்கும் கஷ்டமாகவே இருந்தது. விஜய் சார் என்றாலே குழந்தை ரசிகர்கள் அதிகம். அவர்களால் திரையரங்கிற்கு வர முடியாது என்பது வருத்தமளிக்கிறது.
விஜய் முதல்வராவார் என நினைக்கவில்லை
விஜய்யின் அரசியல் வெற்றி குறித்துப் பேசிய H. வினோத், "ஜன நாயகன் முழுக்க முழுக்க 200 சதவீதம் விஜய் சாரின் திரைப்படம் தான். அவர் முதலமைச்சராவார் என நான் நினைக்கவில்லை.
நான் மட்டுமல்ல, பலரும் அவரை குறைவாக மதிப்பிட்டுவிட்டோம். அவர் மக்கள் மீது வைத்திருக்கிற அக்கறையும், மக்கள் இவர் மீது வைத்திருக்கும் அன்பும் இப்போது பிரம்மாண்டமாகத் தெரிகிறது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
=====