இளையராஜா காப்புரிமை சர்ச்சை, வழக்கு
இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான 134 திரைப்படங்களின் பாடல்கள் மீதான காப்புரிமைச் சர்ச்சையில், டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
134 படங்களுக்கு உரிமை கோர முடியாது
அன்னக்கிளி, 16 வயதினிலே உள்ளிட்ட புகழ்பெற்ற 134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
'சரிகம' தொடர்ந்த காப்புரிமை வழக்கு
'சரிகம இந்தியா லிமிடெட்' நிறுவனம், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் காப்புரிமை வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது.
சரிகம நிறுவனத்தின் ஒப்பந்தம்
அதில், 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் வெளியான 134 திரைப்படங்களின் பாடல்களுக்கான காப்புரிமை, அந்தந்த படத் தயாரிப்பாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சரிகம நிறுவனம் வாதிட்டது.
இளையராஜாவிற்கு எதிராக களமிறங்கிய சரிகம
ஆனால், இளையராஜா இந்தப் பாடல்களை அமேசான் மியூசிக், ஐ டியூன்ஸ் மற்றும் ஜியோ சாவன் போன்ற முன்னணி இசைத் தளங்களில் பதிவேற்றியதோடு, அந்தப் பாடல்கள் மீது உரிமையும் கோரினார். இதை எதிர்த்தே சரிகம நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.
இடைக்காலத் தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, ஏற்கனவே இளையராஜாவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உறுதி செய்தார்.
இளையராஜா தரப்பு மனு தள்ளுபடி
மேலும், பதிப்புரிமை சர்ச்சையில் 'சரிகம' நிறுவனத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட இந்த இடைக்காலத் தடையை நீக்கக் கோரி இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
புதிய உரிமம் வழங்க முடியாது
இதன் காரணமாக, இந்த வழக்கு முழுமையாக முடிவடையும் வரை அந்த 134 படங்களின் பாடல்களை இளையராஜா வணிக ரீதியாகப் பயன்படுத்தவோ, அதற்குப் புதிய உரிமம் வழங்கவோ முடியாது.
இத்தடையின் கீழ் வரும் முக்கியத் திரைப்படங்கள்
நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் கீழ் இளையராஜாவின் இசையில் வெளியாகிப் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்த பல முக்கியத் திரைப்படங்கள் வருகின்றன. அவற்றுள் சில:
அன்னக்கிளி
16 வயதினிலே
முள்ளும் மலரும்
நிழல்கள்
மூடுபனி
ராஜ பார்வை
நெற்றிக்கண்
கல்யாணராமன்
பல்லவி அனுபல்லவி முதலான திரைப்படங்கள் அடங்கும்.
முதல் சட்டப்பூர்வ உரிமையாளர் தயாரிப்பாளர் தான்
இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1957-ன் படி (Copyright Act 1957), ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் ஒரு இசையமைப்பாளருக்கு உரிய ஊதியம் வழங்கி இசையை உருவாக்கச் சொல்லும்போது, அந்தப் படைப்பின் முதல் சட்டப்பூர்வ உரிமையாளராக அந்த தயாரிப்பாளர் தான் இருக்கிறார்.
இளையராஜா உரிமை கோர முடியாது
அந்த வகையில், தயாரிப்பாளர்கள் தங்களுக்குரிய உரிமையை சரிகம நிறுவனத்திற்கு முறைப்படி மாற்றிக் கொடுத்துள்ளதால், இளையராஜா அதன் மீது தனியாக உரிமை கோர முடியாது என்று சரிகம தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
=====