K. Bhagyaraj is the 'King of Screenplay' who reigned supreme from Tamil cinema to Bollywood google
சினிமா

”கோலிவுட் to பாலிவுட்” : தொட்டதெல்லாம் துலங்கியது! : பாக்யராஜ் 'திரைக்கதை மன்னன்' வெற்றிக்கதை...!

தமிழ் சினிமாவில் தொடங்கி பாலிவுட் வரை கோலோச்சிய திரைக்கதை மன்னன் தான் கே. பாக்யராஜ்.

Kannan

திரைக்கதை மன்னன்

இந்தியத் திரையுலகின் “திரைக்கதை மன்னன்” கே. பாக்யராஜ் மாரடைப்பால் சென்னையில் காலமானது திரைத்துறையையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாரதிராஜாவின் உதவியாளராக தொடங்கி, சுவரில்லாத சித்திரங்கள் மூலம் இயக்குநரான அவர், 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் இருக்கிறார்.

தனித்துவமான, இயல்பான கதை

இந்தியத் திரையுலகின் "திரைக்கதை மன்னன்" என்று அழைக்கப்படும் கே.பாக்யராஜ் தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைக்கதை, இயல்பான நகைச்சுவை மற்றும் குடும்பக் கதைகள் மூலம் முத்திரை பதித்தவர்.

பன்முகத் திறமையாளர்

இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் ஆவார். எந்த துறையில் கால் வைத்தாலும், அங்கு தனி முத்திரை பதித்து, தனித்து தெரிபவர் தான் பாக்யராஜ்.

பாரதிராஜாவின் சீடர்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார் பாரதிராஜா காலமாகி 17 நாட்களில் பாக்யராஜ் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுவரில்லாத சித்திரங்கள்

1979-ம் ஆண்டு வெளியான "சுவரில்லாத சித்திரங்கள்" திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாக்யராஜ், 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் 25-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

எளிமையான கதை, மனிதர்களின் வாழ்க்கை

நடுத்தர வர்கம் மற்றும் கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்துப் நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட், காதல் மற்றும் சமூகக் கருத்துக்கள் கலந்த ஒரு படத்தை உருவாக்குவதில் நேர்த்தியானவர் பாக்கியராஜ்.

பிரமாண்டம் இல்லாத எளிய படங்கள்

இவருடைய படங்கள் பிரம்மாண்டமோ, மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளோ இல்லாமல், சாதாரண மனிதனின் வாழ்க்கையைச் சுற்றியே இருக்கும். மிகக் கூர்மையான, அனைவரும் ரசிக்கும்படியான வசனங்களை எழுதுவதில் வல்லவர் பாக்யராஜ்.

பாக்ஸ் ஆபீஸ் ஹிட் இயக்குநர்

முந்தானை முடிச்சு, அந்த 7 நாட்கள், மௌன கீதங்கள், சின்ன வீடு, டார்லிங் டார்லிங் டார்லிங், சுவரில்லாத சித்திரங்கள் ஆகிய படங்களை இயக்கி நடித்தும் இருக்கிறார்.

பிற மொழிகளில் ரீமேக்

பல தமிழ் வெற்றிப் படங்களை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ரீமேக் செய்து இயக்கியுள்ளார். உதாரணமாக, அவர் இயக்கி நடிகர் கமல், ரேவதி நடித்த ஒரு கைதியின் டைரி படத்தை இந்தி ரீமேக்கில் அமிதாப் பச்சனை வைத்து 'ஆக்ரி ராஸ்தா' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

ஆகச் சிறந்த கதை ‘அந்த 7 நாட்கள்

1981-ல் வெளியான அந்த 7 நாட்கள் திரைப்படம் அவரது வெற்றி படங்களில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்று. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரைக்கதைக்கு இப்படம் ஒரு மிக முக்கிய உதாரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் சாதனை இயக்குநர்

இந்திய சினிமாவில் மிகச் சிலரே திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, தயாரிப்பு என அனைத்தையும் கவனிப்பதோடு, கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

பாக்யராஜ் இந்த சாதனையை 1980களில் தொடர்ச்சியாகச் செய்து காட்டினார்.

'இது நம்ம ஆளு', 'ஆராரோ ஆரிரரோ' போன்ற படங்களுக்கு அவரே இசையமைப்பாளராகவும் பணியாற்றினார்.

முருங்கைக்காயை பிரபலப்படுத்தியவர்

1983ல் அவர் இயக்கி, நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. சாதாரண ஒரு காய்கறியை, குடும்பப் படத்தில் மிக சுவாரஸ்யமான நகைச்சுவை மற்றும் காதல் குறியீடாகப் பயன்படுத்திய அவரது திரைக்கதை நுணுக்கம் தமிழ் சினிமா இருக்கும் வரை பேசப்படும்.

பிலிம்பேர் விருது

1983ல் முந்தானை முடிச்சு திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது

தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகளில் SIIMA - 2014 வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

சினிமா மட்டுமன்றி 'பாக்யா' என்ற புகழ்பெற்ற வார இதழின் ஆசிரியராகவும், பல நாவல்களை எழுதிய சிறந்த எழுத்தாளராகவும் சாதித்து காட்டியவர் தான் இயக்குநர் பாக்யராஜ்.

=============================