யார் இந்த ரஜினிகாந்த்
Rajinikanth 75th Birthday : 1960, 70 கால கட்டங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி என இருவரும் மாறி மாறி வெற்றிபடைப்புகளை கொடுத்து வந்த தருணம். அப்போதுதான் குணச்சித்திர நடிகராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் மன்னாதி மன்னன் ரஜினிகாந்த்.
அறிமுக்ம் அபூர்வ ராகங்கள்
1975இல் அபூர்வ ராகங்கள் மூலம் ரஜினியின் தமிழ் திரையுலக பயணம் ஆரம்பமாக, குணச்சித்திரம், வில்லன் என கிடைத்த ரோல்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். 1978இல் வெளிவந்த பைரவி, ரஜினிக்கு நாயகன் அந்தஸ்தோடு, சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் கொடுத்தது என்றால் மிகையாது. இதைத்தொடர்ந்தே ஒரு நாயகனாக இவரின் வெற்றி பயணம் தொடங்கியது.
சினிமாவின் உச்சமாக இருந்த ரஜினிகாந்த்
அன்றுமுதல் இன்றுவரை ரசிகர்களை வசீகரித்து வருகிறது ரஜினி எனும் மந்திர சொல். 1980களில் இருந்து அடுத்த 10 ஆண்டுகள், ரஜினியின் பயணம் விண்ணை தொடும் அளவிற்கு கடின உழைப்புடன் சேர்ந்து வளர்ந்தது.
மாஸ் ஹீரோ ரஜினிகாந்த்
கிராமத்து கதைக்களங்களில் நங்கூரமிட்ட ராமராஜன், வெள்ளி விழா நாயகன் மோகன், நவரச நாயகன் கார்த்திக் என பலரும் வெற்றி படங்களை குவித்து வந்தாலும் அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்து அவர்கள் வேரூன்றினாலும், ரஜினியின் மாஸ் ஹீரோ அந்தஸ்தையும் அந்த கெத்தான ஸ்டலையும் நெருங்கக் கூட முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை, இதனால் சூப்பர் ஸ்டார் தனித்துவமாகவே தமிழ் சினிமாவில் ஒரு ஸ்டாராக ஜொலித்து கொண்டிருந்தார்.
வெறும் நாயகான இருந்து வசூல் நாயகனாக உருவெடுத்த ரஜினி
80களின் தொடக்கத்திலேயே ரஜினி தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது. யதார்த்த கதைக்களத்தில் இருந்து ஆக்சன் ஹீரோ அந்தஸ்துக்கு மாறிய ரஜினிகாந்த், பில்லா, ஜானி, முரட்டுக்காளை, தில்லு முல்லு, மூன்று முகம், பாயும் புலி திரைப்படங்கள் மூலம் தனிப்பெரும் வசூல் சக்கரவர்த்தியாக உருவெடுத்து, தமிழ் சினிமா வணிக மார்க்கெட்டை கட்டிப்போட்டார். ரஜினியை வைத்து அடுத்த படம் யார் இயக்கப்போவது, தயாரிக்கப்பபோவது என ரஜினி ரசிகர்கள் சிந்தனையின் நேரமாக இந்த படம் வெளியீட்டு காலங்கள் இருந்தது.
புதுப்பித்து கொள்வதில் வல்லவர்
90களின் பிற்பாதியில் விஜய், அஜித், பிரசாந்த் என இளம் நாயகர்கள் வெற்றிகளை பதிக்கிறார்கள், அவர்கள் ரஜினிக்கு போட்டி என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்தபோதும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என கேள்வி எழுப்பப் படுகிறது.
ஆனால், அவற்றை எல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் சூப்பர் ஸ்டார் நான் தான் அது என் தனிப்பட்டம் என்னைப்போல் யாரும் இல்லை என்ற வண்ணம் ரஜினிகாந்த், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக்கொண்டே, பல வித படங்களை கொடுத்து மீண்டும் தன்னை ஸ்டாராகவே மக்களிடம் காட்டி வந்தார்.
தொடர்ந்தது ரஜினியின் வசூல் வேட்டை
அந்த சமயங்களில் அமிதாப் பச்சன் வெளிச்சம் குறைய ஆரம்பிக்க,அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா என கமர்ஷியல் படங்களை கொடுத்து இந்திய திரையுலகில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.
ரஜினியின் முத்து திரைப்படம் ஜப்பானிலும் வசூல் வேட்டை நடத்தியது அப்போது .2000ஆம் ஆண்டுகளில் சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என பல நட்சத்திரங்கள் படையெடுத்தனர். அப்போது ரஜினியின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக ரேஸில் சறுக்க, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் என குறிப்பிட்ட இடைவேளைகளில் வெற்றியை தட்டிப்பறித்து மகுடம் சூடி வந்தார்.
3 தலைமுறைகளையும் கட்டி போட்டு ஜொலிக்கிறார்
தமிழ் சினிமா மாறிவிட்டது. ஹீரோ இமேஜில் இருந்து அவர் இறங்கி வர வேண்டும் என விமர்சனங்கள் துரத்த, அதை காதில் வாங்கி கொண்டு, நரைத்த முடி, தாடியுடன் புது தோற்றத்தில் வந்தார் ரஜினிகாந்த். காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு இளம் இயக்குநர்களுடன் கை கோர்த்து வெற்றி வலம் வந்து கொண்டிருக்கும் அவர், காலா, பேட்டை, ஜெயிலர் கூலி என தொடர்ந்து 50 ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் கோலோச்சி இருக்கிறார்.
3 தலைமுறைகளாக கொடி பறக்குது
சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் என தலைமுறைகளை கண்ட ஜென் ஜீ இளைஞர்களையும் கவர்ந்து கொடிக்கட்டி பறக்கிறார் 3 தலைமுறைகளாக, இது சாத்தியமா என்ற கேள்வி எழுவதற்கு முன்னே பதிலாக இருக்கிறார் ரஜினிகாந்த் இது சாத்தியம் தான் என்று.
இந்நிலையில், இவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் அவரது ரசிகர்கள் வரை தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.