Musician Deva Life Biography Music Legacy
இசை உலகில் தேவாவின் சகாப்தம்
ஒரு பக்கம், "வந்தேண்டா பால்காரன்" என்று ஒலித்தாலே ரசிகர்களின் ஆரவாரத்தை நினைவுபடுத்தும் இசை; இன்னொரு பக்கம், "கொஞ்ச நாள் பொறு தலைவா" என்று காதலின் ஏக்கத்தைச் சொல்லும் மெலடி; மற்றொரு பக்கம், சென்னையின் தெருக்களில் ஒலித்த கானா இசையைத் தமிழ் சினிமாவின் மையத்திற்குக் கொண்டு வந்த பாடல்கள். இந்த மூன்று இசை அனுபவங்களுக்கும் பின்னால் இருந்தவர் ஒரே மனிதர். அவர்தான் 'தேனிசைத் தென்றல்' தேவா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு பல மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்து, 1990-களின் இசை உலகில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர். கானா இசை என்றாலே நினைவுக்கு வரும் பெயர்களில் ஒருவராக மாறியவர்.
இன்று தேவா மறைந்த செய்தி இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அவர் விட்டுச் சென்ற இசைப் பயணத்தைப் பற்றிப் பேசும்போது, அவர் கானா இசையைத் தாண்டி மெலடிகளையும் எவ்வாறு நேசித்தார், அவரது வெற்றிக்குப் பின்னால் இருந்த உழைப்பு என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
ஆரம்பகால வாழ்க்கையும் இசைப் பயணமும்
தேவா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட தேவநேசன் சொக்கலிங்கம், 1950-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி பிறந்தவர். சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் வளர்ந்த அவர், சிறு வயதிலிருந்தே இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
அவருடைய ஆரம்பகால வாழ்க்கையில் கடுமையான பொருளாதார சிரமங்கள் இருந்தன. தனது வீட்டில் தனக்கு 18 வயதாகும் வரை வானொலிகூட இல்லை என்று அவர் பேட்டிகளில் நினைவுகூர்ந்துள்ளார். கடைகளில் ஒலிக்கும் பாடல்களையும் பொது நிகழ்ச்சிகளில் கேட்கும் இசையையும் வைத்து இசை மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.
சினிமாவில் இசையமைப்பாளராகப் புகழ்பெறுவதற்கு முன்பே, 300-க்கும் மேற்பட்ட ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்ததாகத் தெரிவித்துள்ளார். 1989-இல் 'மனசுக்கேத்த மகராசா' திரைப்படம் மூலம் முழுமையாக அறிமுகமாவதற்கு முன்பாகவே, 1980-களில் ஏராளமான பக்தி ஆல்பங்கள் மற்றும் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியின் 'வயலும் வாழ்வும்' போன்ற நிகழ்ச்சிகளுக்கு பாடல்களை தேவா இசையமைத்துள்ளார்.
திரைப்பட இசைப் பயணம் மற்றும் உச்சம்
1986-ஆம் ஆண்டு வெளியான 'மாட்டுக்கார மன்னாரு' தேவாவின் ஆரம்பகால திரைப்பட இசைப் பயணத்தில் முக்கியமானது. தொடர்ந்து 'மனசுக்கேத்த மகராசா', 1990 ஆம் ஆண்டு வெளியான 'வைகாசி பொறந்தாச்சு' போன்ற படங்கள் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.
1990-களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருவெடுத்தார். 1996-ஆம் ஆண்டில் மட்டுமே அவர் 36 திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். இது அன்றைய தமிழ் சினிமாவில் அவரது இசைக்கு இருந்த மாபெரும் தேவையை உணர்த்துகிறது.
ரஜினிகாந்த் உடன் இணைந்த வெற்றிகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாமலை', 'பாட்ஷா', 'அருணாசலம்' போன்ற படங்களுக்கு தேவா அமைத்த இசை மாபெரும் வெற்றி பெற்றது.
அண்ணாமலை (1992): "வந்தேண்டா பால்காரன்" பாடல் ரஜினியின் திரை ஆளுமைக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கும் ஏற்ப அமைந்தது. மேலும், 1992-இல் ரஜினியின் 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் கார்டுக்கு தேவா அமைத்த இசை இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பாட்ஷா (1995): "நான் ஆட்டோக்காரன்", "ஸ்டைல் ஸ்டைல்தான்" போன்ற பாடல்கள் வேகமும் தாளமும் நிறைந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றன.
கானா இசையின் அடையாளம்
கானா என்பது வெறும் ஆட்டத்துக்கான இசை மட்டுமல்ல; சென்னை நகரின் வாழ்க்கை, மக்களின் பேச்சு, நகைச்சுவை, கொண்டாட்டம், வலி, ஏக்கம் போன்றவற்றை வெளிப்படுத்தும் ஒரு இசை வடிவம்.
சென்னை கானாவின் தாளத்தையும் பேச்சு வழக்கையும் திரைப்படப் பாடல்களில் பயன்படுத்தி, பெரிய அளவிலான ரசிகர்களிடம் கொண்டு சென்றதில் தேவாவுக்கு முக்கியமான பங்கு இருந்தது. அன்றாடம் மக்கள் பேசும் வார்த்தைகள், எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வரிகள், உடனே மனதில் பதியும் மெட்டுகள் மூலம் "கானா பாடல்களின் அரசன்" என்ற அடையத்தைப் பெற்றார்.
மெலடி பாடல்களின் மீதான விருப்பம்
மக்கள் அவரை கானா இசையின் அடையாளமாக கொண்டாடினாலும், தனக்கு மெலடி பாடல்களை உருவாக்குவதுதான் மிகவும் பிடிக்கும் என்று தேவா குறிப்பிட்டுள்ளார்.
ஆசை (1995): "கொஞ்ச நாள் பொறு தலைவா" போன்ற பாடல்கள் காதல் உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்தின.
பிற முக்கியப் படங்கள்: 'காதல் கோட்டை', 'நேருக்கு நேர்', 'நினைத்தேன் வந்தாய்', 'வாலி', 'குஷி', 'பிரியமுடன்' போன்ற படங்களில் அவரது மெலடி பாடல்கள் ரசிகர்களின் நெஞ்சைக் கவர்ந்தன.
கமலாஹாசனின் 'அவ்வை ஷண்முகி', 'பஞ்சதந்திரம்' போன்ற படங்களுக்கும் அவரே இசையமைத்தார். மதுரையின் சித்திரைத் திருவிழாவில் ஒலிக்கும் "வாராரு அழகர் வாராரு" பாடல் தேவா இசையமைத்த மிக முக்கியப் பாடல்களில் ஒன்றாகும்.
மறக்க முடியாத இசைத் தடம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள 'தேனிசைத் தென்றல்' தேவா, தனது இசையின் வழியாகக் கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் என்றும் நீங்காமல் நினைவுகூரப்படுவார்.
=====