National Award Winning Director and Cinematographer Chezhiyan Passes Away Chennai
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும், தேசிய விருது பெற்ற இயக்குநருமான செழியன் உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 10, 2026) சென்னையில் காலமானார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வந்த செழியன் சென்னை தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்த்திரையுலகில் தொடரும் சோகம்
கடந்த மாதம் தமிழ்த் திரையுலகின் இருபெரும் இயக்குநர்களான இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரைக்கதை மன்னன் பாக்யராஜ் உள்ளிட்டோர் மறைந்த சோகமே இன்னும் மறையாத சூழலில், செழியனின் இந்த மறைவு செய்தி சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொறியியல் பட்டதாரி முதல் சினிமா பயணம் வரை
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செழியன், ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். எனினும், ஒளிப்பதிவின் மீது கொண்ட அலாதி பிரியத்தால் சினிமா உலகிற்குள் நுழைந்தார்.
பின்னர் பிரபல மூத்த ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். பின்னர் சில படங்களில் துணை இயக்குநராகவும் பணியாற்றினார்.
சீமான் திரைப்படத்தில் முதல் வாய்ப்பு
இயக்குநர் சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த 'தம்பி' திரைப்படத்தில் சில பாடல்களைப் படமாக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அதில் "சுடும் நிலவு, சுடாத சூரியன்" பாடலை அவர் ஒளிப்பதிவு செய்த விதம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஒளிப்பதிவில் முத்திரை பதித்த படங்கள்
செழியனின் அபாரமான ஒளிப்பதிவுத் திறமையைப் பார்த்த இயக்குநர் பாலாஜி சக்திவேல், தனது 'கல்லூரி' படத்திற்கான முழு ஒளிப்பதிவு வாய்ப்பையும் இவருக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கியப் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்தார்.
ரெட்டச்சுழி
தமிழ் சினிமாவின் 'பா' வரிசை இயக்குநர்களான பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா இணைந்து நடித்த இத்திரைப்படத்திற்குச் செழியன் தான் ஒளிப்பதிவு.
தென்மேற்கு பருவக்காற்று
நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திற்கு கேமரா கையாண்டது இவரே.
இயக்குநர் பாலாவுடன் கூட்டணி
இயக்குநர் பாலாவின் பிரம்மாண்ட படைப்புகளான 'பரதேசி' மற்றும் 'தாரைதப்பட்டை' ஆகிய திரைப்படங்கள் செழியனின் ஒளிப்பதிவுப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன.
'டூ லெட்' மூலம் தேசிய விருது
ஒளிப்பதிவாளராகப் புகழ்பெற்ற செழியன், 2017 ஆம் ஆண்டு 'டூ லெட்' (To Let) என்ற திரைப்படத்தை அவரே எழுதி, இயக்கினார்.
எளிய நடுத்தர குடும்பங்களின் வாடகை வீட்டுப் பிரச்னையைப் யதார்த்தமாக பேசிய இத்திரைப்படம், உலகளாவிய அளவில் பல திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றதோடு, 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
தனது தனித்துவமான கேமரா கோணங்களாலும், யதார்த்தமான இயக்கத்தினாலும் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்திய செழியனின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
=====