சினிமா

விஜய்யை ஓவர்டேக் செய்யும் ரஜினி : ’கூலி’ விற்பனையில் சாதனை

ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் கூலி திரைப்படத்தின் ஓவர்சீஸ் விற்பனை 81 கோடி ரூபாய் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Kannan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்தப் படமாக இருந்தாலும், அது வசூலில் களைகட்டும்.

இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அவரது படம் சக்கைபோடு போடும்.

அந்த வகையில், வேட்டையன் வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படம் ரிலீசாக உள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

விரைவில் கூலி பர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாக இருக்கிறது.

நாகார்ஜூனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளமே படத்தில் இடம் பெற்று இருக்கிறது.

கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். சிறப்பு பாடல் ஒன்றுக்கு பூஜா ஹெக்டே நடனமாடி இருக்கிறது.

அனிருத் இசையமைக்க, படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், வெளிநாடுகளிலும் நடந்து முடிந்துள்ளது.

போஸ்ட் புரொடக்சன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ’கூலி’ படத்தின் வெளிநாட்டு உரிமம் 81 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுவே தமிழில் அதிகபட்ச ஓவர்சீஸ் விற்பனையாகும்.

இதற்கு முன்பு நடிகர் விஜய்யின் லியோ படம் 66 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது.

அதற்கு அடுத்தபடியாக அண்மையில் வெளியான கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் ரூ.63 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

அவற்றையெல்லாம் ஓவர்டேக் செய்யும் விதமாக 81 கோடிக்கு ஓவர்சீஸ் ரைட்ஸை விற்பனை செய்து மாஸ் காட்டி உள்ளது கூலி படக்குழு.

ஆகஸ்டு 14ம் தேதி திரைக்கு வர இருக்கும் கூலி படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

====