ராஷ்மிகா - தேவரகொண்டா ஜோடி
Rashmika Mandanna And Vijay Deverakonda : பொதுவாக சினிமாவில் உள்ள நாயகர்கள், அதுவும் ஜோடிகளாக நடிப்பவர்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். தமிழ் சினிமா மட்டுமல்லாது, கன்னடா, தெலுங்கு என உலக சினிமா வரை, அந்த ஜோடி நட்சத்திரங்களை கொண்டாடுபவர்கள் உண்டு. அப்படி இருக்கையில், ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு பன்மொழி ரசிகர் பட்டாளம் கலைகட்டுகிறது என்றால் மிகையாகாது.
அதன்படி, கீதா கோவிந்தம் படத்தில் ஆரம்பமாகி டியர் காம்ரேட் என இவர்களின் ஜோடி பொருத்தத்தால், அப்படம் வணிக ரீதியாகவும், ரசிகர்கள் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. அப்படி இருக்கையில், அவர்கள் சேர்ந்த முதல் படத்தில் இருந்தே அவர்கள் ஜோடி நிஜத்தில் ஒன்று சேர்ந்தால் என கேள்விகளும், கிசுகிசுப்புகளும் ரசிகர் வட்டாரத்தில் சுற்றி வந்தது.
ரகசியமாக நடைபெற்ற நிச்சயதார்த்தம்
இந்நிலையில், அதை உறுதிப்படுத்தி ரசிகர்கள் உச்சி குளிர வைக்கும் விதமாக, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது போல், இருவரும் மோதிரம் அணியும்படி உள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. ஆனால் காதலை போலவே, இருவரும் இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தனர்.
ராஷ்மிகாவின் ஜாலி அப்டேட்
ஆனாலும் ராஷ்மிகா விரலில் இருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் அதை சொல்லாமல் சொல்லியது. இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்திய நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார். அப்போது அவரது விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி பேச்சு எழுந்தது.இதற்கு ராஷ்மிகா, 'இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார். இப்படி தொடர்ந்து சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ராஷ்மிகா, தனது திருமண அப்டேட்டாக சில துணுக்குகளை ஜாலியாக நிகழ்ச்சிகளில் உதிர்த்து வருகிறார்.
வைரலாகும் ராஷ்மிகா வீடியோ
இதனை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் வழக்கம்போல், இந்த தகவல்கள் குறித்து இருதரப்பினரும் பதிலளிக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், "ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது ஒரு வரம்" என்று ராஷ்மிகா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் வெற்றிவிழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள், பணியாற்றியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் விஜய் தேவரெகொண்டாவும் பங்கேற்று இருந்தார்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார்
அப்போது நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, நீங்கள் (விஜு) ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறீர்கள், படத்தின் வெற்றியிலும் நீங்கள் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். இந்த முழு பயணத்திலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது ஒரு வரம் என்று பேசினார்.இவ்வாறு ராஷ்மிகா பேசியதும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ராஷ்மிகாவுக்கு முத்தமிட்ட விஜய் தேவரகொண்டா
முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுடன் கைகுலுக்கும் போது அவரது கையை பிடித்து முத்தமிட்டது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் முதல் முறையாக பொது நிகழ்வில் தங்களது காதலை வெளிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் கூறி வரும் நிலையில், இந்த ஜோடியின் ரசிகர் பட்டாளம் இந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.