Puja for his 56th film has commenced source:google,thamizhalai
சினிமா

நடிகர் தனுஷின் ‘ஓம்’ திரைப்பட வெளியீடு ஒத்திவைப்பு: புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு.. 56-வது பட பூஜை தொடக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' மற்றும் சூர்யாவின் 'சீன்' படங்களின் வெளியீடு காரணமாகத் தனுஷின் 'ஓம்' பட ரிலீஸ் தள்ளிவைப்பு.

Kavitha prasanna

Release of actor Dhanush’s film ‘Om’ postponed; new release date to be announced soon. Puja for his 56th film has commenced!

'ஓம்' திரைப்படம் மற்றும் படக்குழு

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அவரது 55-வது திரைப்படமான 'ஓம்' படத்தின் வெளியீடு அதிகாரப்பூர்வமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டெக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தில் மம்மூட்டி வில்லனாகவும், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைப்பில் ரோகேஷ் எழுதிய 'அலாக்கா லோவா' பாடல் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெளியீடு ஒத்திவைப்பிற்கான காரணம்

இப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. இருப்பினும், அக்டோபர் 15-ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் - 2' திரைப்படம் வெளியாகவுள்ளது.

ரஜினி படத்திற்கு மரியாதை நிமித்தமாகத் தங்களது படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றுவதாக நடிகர் தனுஷ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தீபாவளி ரேஸிலும் இல்லை

அதேபோல தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி சூர்யாவின் 'சீன்' திரைப்படம் வெளியாகிறது.

அவர்கள் தான் முதலில் அந்தத் தேதியை அறிவித்தார்கள் என்பதால், பெரிய படங்களுக்கு இடையே பரஸ்பர புரிதல் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், திரையுலகின் நலனைக் கருத்தில் கொண்டும் தீபாவளிக்கும் படம் வெளியாகவில்லை எனத் தனுஷ் தெரிவித்துள்ளார்.

புதிய ரிலீஸ் தேதி விரைவில்

'ஓம்' திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

56 வது படத்தின் பூஜை

லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.

மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தின் பூஜை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கருப்பணசாமி கோயிலில் இன்று ( 25-9-2026) பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

பூஜையின் சிறப்பம்சமாக நடிகர் தனுஷ் கருப்பணசாமிக்கு 18 அடியிலான அரிவாளை காணிக்கையாக வழங்கினார்.

தனுஷின் இந்த 56 வது திரைப்படத்தில் நடிகர்கள் வடிவேலு,எஸ்.ஜே.சூர்யா,பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

====