Samantha Husband Raj Babymoon Thailand Trip Luxury Cost Details
திருமணமான புதிதில் புதுமணத் தம்பதிகள் தங்களது புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியோடு தொடங்குவதற்காக வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வார்கள் . அதற்கு ‘ஹனிமூன்’ என்று பெயர்.
ஆனால், தற்போது இந்த ஹனிமூனுக்கு இணையாகப் பிரபலங்கள் மற்றும் தம்பதியினரிடையே ‘பேபி மூன்’ என்ற புதிய ட்ரெண்ட் மிக வேகமாகப் பரவி வருகிறது.
‘பேபி மூன்’ என்றால் என்ன?
கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள், தங்களது பிரசவத்திற்கு முந்தைய காலத்தைக் கொண்டாடும் விதமாக வெளிநாடுகளுக்கோ அல்லது வெளி ஊர்களுக்கு தங்களுக்கு மகிழ்ச்சி தரும் அமைதியான இடங்களுக்கோ சுற்றுலா செல்வதையே ‘பேபி மூன்’ என்கிறார்கள்.
கர்ப்பகால நாட்களை அழகாக்க
பெரிய நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது கர்ப்ப காலத்தில் வெளிநாடுகளுக்கு சென்று, இதற்கென பிரத்யேக வசதிகள் கொண்ட நட்சத்திர விடுதிகளில் தங்கி, தங்களது கர்ப்பகால அழகிய நாட்களைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
சமந்தா - ராஜ் தம்பதி மூலம் வைரலான ‘பேபி மூன்’
தற்போது தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தனது கணவர் ராஜுடன் ‘பேபி மூன்’ கொண்டாடுவதற்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து அவர் மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவ, தற்போது ‘பேபி மூன்’ பற்றிய விவாதத்தையும், தேடலையும் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியுள்ளது.
எதற்காக இந்த ‘பேபி மூன்’ செல்ல வேண்டும்?
சரி எதற்காக இந்த பேபி மூன். குழந்தை பிறந்த பிறகு பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்கள் குழந்தையை பராமரிப்பதிலேயே தங்களது முழு நேரத்தையும் செலவிட வேண்டியிருக்கும். எனவே, அதற்கு முன்பாக பேபிமூன் செல்ல விரும்புகிறார்கள்.
பேபிமூன் செல்லும் போது...!
தம்பதியர் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளவும்
கர்ப்ப காலத்தை எவ்வித மனஅழுத்தமும் இன்றி இனிமையாக்கவும்
தாயின் மகிழ்ச்சி மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும் இந்த ‘பேபி மூன்’ அவசியமாகிறது.
நட்சத்திர விடுதிகளில் வழங்கப்படும் சொகுசு வசதிகள்
கர்ப்பிணிப் பெண்களின் உடல் மற்றும் மன நலனைக் கருத்தில் கொண்டு, இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் சொகுசு விடுதிகளில் பின்வரும் வழக்கமான சேவைகள் வழங்கப்படுகின்றன.
கர்ப்பிணிகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான, சத்தான உணவுகள் நேரத்திற்கு நேரம் தயாரித்து வழங்கப்படும்.
பெரும்பாலும் கடற்கரை அல்லது இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளுக்கு அருகிலேயே இந்த விடுதிகள் அமைந்திருக்கும்.
நிபுணத்துவம் பெற்ற நபர்களைக் கொண்டு கர்ப்பிணிகளுக்கான பிரத்யேக மசாஜ் மற்றும் ரிலாக்ஸ் செய்யும் இசை சிகிச்சைகள் அளிக்கப்படும்.
மனதை அமைதிப்படுத்த யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் வழங்கப்படும்.
நிம்மதியான உறக்கம், தம்பதியரின் அழகிய தருணங்கள் மற்றும் தேவைப்பட்டால் நண்பர்கள், உறவினர்களை சந்திக்க தனி வசதிகள் என அனைத்தும் இதனுள் அடங்கும்.
பேபிமூன் கட்டண விபரம்
இந்த ‘பேபி மூன்’ தங்குமிடங்களின் கட்டணம் அவரவர் தேவை மற்றும் விருப்பத்தைப் பொறுத்து மாறுபடும். சொகுசு வசதிகளுடன் கூடிய விடுதிகளில் ஒரு நாளைக்கு ரூ. 75,000 முதல் பல லட்சங்கள், கோடிகள் வரை கூட கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பேபி மூன் செல்ல ஏற்ற காலம் எது?
மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்ப காலத்தின் 14-வது வாரம் முதல் 28-வது வாரம் வரை (அதாவது 3 மாதங்கள் முடிந்த பிறகு) உள்ள இடைப்பட்ட காலமே பேபி மூன் செல்ல மிகவும் உகந்தது.
ஏனெனில், கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில்தான் காலையில் உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் கர்ப்பிணிகளை அதிகம் பாதிக்கும். இந்த சவாலான நேரத்தைக் கடந்து, இடைப்பட்ட வாரங்களில் நல்ல முறையில் ஓய்வெடுக்கவே பேபி மூன் பயணம் திட்டமிடப்படுகிறது.
கர்ப்பிணிகளுக்கு முக்கிய அறிவுரை
கர்ப்பிணியின் உடல்நிலையைப் பொறுத்தே பேபி மூன் செல்வது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும். எனவே, பயண விவரங்கள் குறித்து தங்களது மகப்பேறு மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.
ஒருவேளை திருமணமாகி ஏதேனும் சூழ்நிலையால் ஹனிமூன் போக முடியாதவர்கள் கூட, இந்த பேபி மூன் பயணத்தைத் தாராளமாகத் திட்டமிடலாம்.
======