இயக்குநராக அறிமுகமாகி தென்னிந்திய திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. 2015-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த படம் ‘இசை’. அதற்குப் பிறகு நடிப்பதிலேயே ஆர்வம் காட்டி வந்தார்.
இந்தநிலையில் ‘கில்லர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தினை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார் எஸ்.ஜே.சூர்யா என்ற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் இதன் தயாரிப்பாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படத்தினை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது.
‘கில்லர்’ குறித்து எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தள பதிவில் , எனது கனவுப் படமான ‘கில்லர்’ மூலம் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா திரும்பி இருக்கிறார். இதற்காக கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் தேவை என்று தெரிவித்துள்ளார். இத்துடன் ‘கில்லர்’ கேர்ள் எனக் குறிப்பிட்டு ப்ரீத்தி அஸ்ரானியின் எக்ஸ் தளத்தையும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ‘கில்லர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானியும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.