சினிமாவில் ரஜினி
Rajini 173 Movie Update in Tamil : 1975 ஆம் ஆண்டு அபூர்வராகங்களில் அறிமுகமாகி இன்று தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் ஆரம்ப காலகட்டங்களில் எதிரி மற்றும் துணை வேடங்களில் நடித்து தன்னை நிரூபித்து, இன்று தமிழ்நாட்டின் சினிமா அடையாளமாக மாறியுள்ளார் என்றால் மிகையாகது. 74 வயதை நெருங்கியுள்ள இவர், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார், உலகளவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இவரின் படத்திற்கு இன்றளவும் எதிர்பார்ப்பு உச்சத்தை தொடும்.
ரஜினியின் முந்தைய கூலி
அதன்படி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இறுதியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தின் அப்டேட்டை எதிர்நோக்கி இருந்த ரசிகர்களுக்கு, அதிகாரப்பூர்வமான படத்தின் அடுத்த அப்டேட் வெளிவந்துள்ளது.
ரஜினிகாந்த் கமல் கூட்டணி
அதன்படி ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தும் வகையில் சில தகவல்களை வெளியில் கிசுகிசுத்து வந்தனர். அதேசமயம், ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது. இப்படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், இப்படத்தை கமல்ஹாசனே தயாரிப்பார் என்றும் தகவல் வெளியானது.
உறுதியான ரஜினியின் 173 வது படம்
இதற்கிடையே, ரஜினி- கமல் கூட்டணியில் வெளியாக இருக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது.அதன்படி, ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார்(Rajini 173 Movie Director Sundar C) எனவும் இப்படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து, ரஜினி, கமல், சுந்தர்.சி என மூவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
28 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர்.சி, ரஜினி கூட்டணி
ரஜினி- கமல்- சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் பேரெதிர்பார்ப்பு சினிமா பிரியர்கள் மத்தியில் உருவாகியுள்ள நிலையில். 1997ல் ரஜினிகாந்தை முதல் முறையாக 'அருணாச்சலம்' படத்திற்காக இயக்கிய சுந்தர்.சி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.