Veteran Producer AVM Saravanan Passed Away Today Read A V M Saravanan Biography Birthday Death News in Tamil AVM Studios
சினிமா

AVM Saravanan Death: ஏ.வி.எம்.சரவணன் காலமானார் : யார் இந்த சரவணன்?

AVM Saravanan Passed Away News in Tamil : பராசக்தி', 'களத்தூர் கண்ணம்மா', 'சர்வர் சுந்தரம்', 'முரட்டுக்காளை' என பல வெற்றிப் படங்களை கொடுத்த ஏ.வி.எம். ஸ்டுடியோ உரிமையாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்.

Baala Murugan

ஏவிஎம் ஸ்டுடியோ தோன்றல்

AVM Saravanan Passed Away Death News in Tamil : திரைத்துறையில் ஒரு சகாப்தமாக விளங்கியவர் ஏ.வி.எம். என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட ஏ.வி.மெய்யப்ப செட்டியார். சினிமாவில் கருப்பு - வெள்ளை காலம் முதல் தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பம் காலம் வரை 75 ஆண்டுகளில் 175 படங்களை தயாரித்து சாதனை படைத்த நிறுவனம் ஏ.வி.எம் என்று பெயர் இன்றளவும் இருந்து வருகிறது.

முதல் படம் ‘அல்லி அர்ஜுனா’

இந்த நிறுவனம் ஆரம்ப காலம் முதலே பல்வேறு சவால்களை சந்தித்து பிறகு தனித்து ஒரு சாம்ராஜ்ஜியமாக நின்றது. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் 1934-ம் ஆண்டு கொல்கத்தா 'நியூ தியேட்டர்ஸ் ஸ்டூடியோ' மூலம் 'அல்லி அர்ஜூனா' என்ற படத்தை தயாரித்தார்.

அடுத்து 'ரத்னாவளி' என்ற படத்தையும், தொடர்ந்து 'நந்தகுமார்' என்ற படத்தையும் தயாரித்தார். ஆனால், முதல் 3 படங்களும் தோல்வியை சந்தித்தன.

3 படங்களுக்கு பிறகு 1940ல் ஸ்டுடியோ

தொடர் தோல்விகளுக்கான காரணங்களை தோண்ட ஆரம்பித்தார் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். அதன்பின், "நம்மிடம் ஸ்டூடியோ(AVM Studios) இல்லாததால் நம் விருப்பப்படி படம் எடுக்க முடியவில்லை. நாமே சென்னையில் ஸ்டூடியோ ஆரம்பித்து படம் எடுத்தால் என்ன?" என்ற முடிவுக்கு வந்தார்.

அதற்கு அதிக பொருள் செலவு ஏற்பட்டதால், வேறு சிலரையும் கூட்டணி சேர்த்துக் கொண்டு சென்னை அடையாறில் 1940-ம் ஆண்டு பிரகதி ஸ்டூடியோவை தொடங்கினார்.

இந்த நிறுவனம் மூலம் 'பூகைலாஸ்', 'வசந்தசேனா', 'வாயாடி', 'போலி பாஞ்சாலி', 'என் மனைவி' ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டன.

1942-ம் ஆண்டு 'சபாபதி' படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை இயக்கியது ஏ.வி.மெய்யப்ப செட்டியார். அவர் தயாரித்த கன்னட படம் 'ஹரிசந்திரா'வை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டார். இந்தியாவில் முதல் 'டப்பிங்' படம் இதுதான்.

1945 ல் ஏவிஎம் ஆரம்பம்

1945-ம் ஆண்டு டி.ஆர்.மகாலிங்கம், குமாரி ருக்மணி நடித்த 'ஸ்ரீ வள்ளி' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு, 1945-ம் ஆண்டு ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது.

ஆனால், புதிய மின்சார இணைப்புகள் கிடைக்காததால் சொந்த ஊரான காரைக்குடியில் ஏ.வி.எம். ஸ்டூடியோ நிறுவப்பட்டது. 1947-ம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனம் எடுத்த 'நாம் இருவர்' படத்தில் பாரதியார் பாடல்கள் சேர்க்கப்பட்டன.படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது.

காரைக்குடியில் இருந்து சென்னைக்கு மாறிய ஏவிஎம்

அதன்பிறகு, காரைக்குடியில் இருந்து சென்னைக்கு ஏ.வி.எம். ஸ்டூடியோ(AVM Studios History in Tamil) மாறியது. படப்பிடிப்புக்கான எல்லா வசதிகளும் செய்யப்பட்டன. அங்கு எடுத்த முதல் படம் 'வாழ்க்கை'. 1949-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் படம் வெள்ளி விழா படமாக அமைந்தது.

அந்த காலத்தில் ஏ.வி.எம். நடிப்பு பல்கலைக்கழகமாகவே விளங்கியது. நடிகர்கள் டி.ஆர்.மகாலிங்கம், சிவாஜி கணேசன், கன்னட நடிகர் ராஜ்குமார், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கமல்ஹாசன், வி.கே.ராமசாமி, சிவகுமார், நடிகைகள் வைஜெயந்திமாலா, குமாரி ருக்மணி, விஜயகுமாரி, குட்டி பத்மினி போன்றோர் இங்கிருந்து உருவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் மறைவுக்கு பிறகு ஏவிஎம் சரவணன்

ஏ.வி.மெய்யப்ப செட்டியார் மறைவுக்கு பிறகு 1958-ம் ஆண்டு அவரது மகன் ஏ.வி.எம்.சரவணன்(AVM Saravanan History in Tamil) ஏ.வி.எம். நிறுவனத்தை வழிநடத்த தொடங்கினார். தந்தையைப் போலவே இவரும் கடமையை உயிராக மதித்தார். 'பராசக்தி', 'களத்தூர் கண்ணம்மா', 'சர்வர் சுந்தரம்', 'முரட்டுக்காளை' என பல வெற்றிப் படங்களை கொடுத்தார். கடைசியாக 'அயன்', 'சிவாஜி' வரை பல படங்களை தயாரித்தார்.

பண்பின் சிகரம் ஏவிஎம் சரவணன்

தொழிலதிபர், ஸ்டூடியோ அதிபர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவராக ஏ.வி.எம். சரவணன் இருந்தாலும், தனது ஸ்டூடியோவில் வேலை பார்க்கும் தொழிலாளியுடன் தானும் ஒரு தொழிலாளியாக பணிபுரிவார். எந்த சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்தாலும் தவறாமல் போய் வாழ்த்திவிட்டு வருவார். 'அப்படி வாழ்த்துவதுதான் அழைப்பு கொடுத்தவர்களுக்கு நாம் காட்டும் மரியாதை' என்பார்.

தொழிலாளிகளுக்கு முன்னுரிமை

ஒரே நாளில் பல விசேஷங்கள் வந்தால், ஏழை தொழிலாளி வீட்டு நிகழ்ச்சிக்கே முன்னுரிமை கொடுப்பார். 'அவர்கள் நம்மை எதிர்பார்ப்பார்கள். அவர்கள் குடும்பத்தை ஏமாற்றக்கூடாது' என்று நினைப்பவர். 'எம்மதமும் சம்மதம்' என்ற கொள்கையை கொண்டவர் அவர் என்று இன்றளவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் அவரை போற்றி புகழ்கின்றனர்.

ஏவிஎம் சரவணன் வாழ்க்கை முறை

எவரிடமும் எதார்த்தமாக பழகும் சுபாவம் உடையவர், கோடம்பாக்கம் வழியாக காரில் சென்றால் கூட கோடம்பாக்கம் பாலத்திற்கு முன்பு இடதுபக்கம் இருக்கும் இந்து கோவிலை கும்பிடுவார். கார் பாலத்தில் ஏறும்போது இடதுபக்கம் தெரியும் மசூதியை வணங்குவார்.

கார் பாலத்தின் மையத்திற்கு வரும்போது லயோலா கல்லூரி வளாகத்தில் இருக்கும் கிறிஸ்தவ தேவாலயத்தை பார்த்து கும்பிடுவார். அரசியல் தலைவர்களில் காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சோனியாகாந்தி ஆகியோருடன் பழகியவர். பத்திரிகை, ஊடகங்களில் ஏ.வி.எம்.சரவணன் பற்றி செய்தி வந்தால், உடனே அந்த நிறுவனத்திற்கு நன்றி கடிதம் அனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

முயற்சி திருவினை்யாக்கும்

அவரது அலுவலக மேஜையில் 'முயற்சி திருவினையாக்கும்' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பலகை இடம் பெற்றிருக்கும். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், யாரிடம் பேசினாலும் கையைக் கட்டிக்கொண்டு நிற்கும் அவரது பணிவு எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

ஏவிஎம் சரவணன் மறைவு

86 வயதை எட்டிய ஏவிஎம் சரவணன் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக இன்று காலை மரணம்(AVM Saravanan Death) அடைந்தார். இவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் உடலுக்கு திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

===