கல்வி

பொறியியல் தரவரிசை வெளியீடு : கலந்தாய்வு தேதி அறிவிப்பு

2025-2026 பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

S Kavitha

பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டார். தரவரிசைப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வு தொடர்பாக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.

அதன்படி, 2025ஆம் ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஜூலை 9ஆம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பொது கலந்தாய்வு ஜூலை 14ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 26ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

www.tneaonline.org என்ற இணைய தள முகவரி மூலம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மாணவர்கள் நாளை முதல் ஜூலை 2ஆம் தேதிவரை திருத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.