கல்வி

பொறியியல் தரவரிசை: 200க்கு 200 எடுத்து சாதனை

பொறியியல் தரவரிசையில் 144 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

S Kavitha

2025-ஆம் ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்களின் கூடுதல் விவரங்களை தெரிவித்தார்.

தரவரிசை பட்டியலில் 2,41,641 பேர் இடம் பெற்றுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 41,773 அதிகம் என்றும் கூறினார். மேலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்றும் , 47,372 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

144 மாணவர்கள் பொறியியல் தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 கட் ஆப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சகஸ்ரா என்ற மாணவி பொறியியல் தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும், நாமக்கல் மாணவி கார்த்திகா இரண்டாம் இடத்தையும், அரியலூர் மாணவன் அமலன் ஆண்டோ மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தரணி என்ற மாணவி முதல் இடத்தையும், சென்னையைச் சேர்ந்த மைதிலி என்ற மாணவி இரண்டாம் இடத்தையும் கடலூரைச் சேர்ந்த முரளிதரன் என்ற மாணவன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளதாகவும் அமைச்சர் கோ.வி. செழியன் கூறினார்.

====