ஒரே மாதத்தில் 3 உலக கோப்பைகள்
Indian Women's Teams Won 3 World Cup 2025 : உலக அளவில் விளையாட்டு அரங்கில் இந்திய மகளிர் அணி புதிய சரித்திரம் படைத்து வருகிறது. இதன்படி நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் இந்திய மகளிர் அணி மூன்று உலகக் கோப்பைகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
கடந்த நவம்பர் 2 ஆம் தேதி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை, நவம்பர் 23 ஆம் தேதி பார்வையற்ற மகளிருக்கான டி20 உலகக்கோப்பை மற்றும் நவம்பர் 24 ஆம் தேதி மகளிர் கபடி உலகக்கோப்பையை வென்று இந்திய மகளிர் அணி புதிய சரித்திரம் படைத்துள்ளது. இந்திய மகளிர் அணிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், மாநில முதல்வர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்
கடந்த நவம்பர் 2 ஆம் தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி இந்தியாவின் நேவி மும்பையில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
2 முறை தோல்வியை தொடர்ந்து வெற்றி
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 298 ரன்களைக் குவித்தது. கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி முதல் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதற்கு முன்பு இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி தோல்வியை பெற்ற நிலையில், இம்முறை வெற்றியை தன்வசமாக்கியது இந்திய மகளிர் அணி.
கண் பார்வையற்ற மகளிருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை டி20 தொடர்
இலங்கையில் கண் பார்வையற்ற மகளிருக்கான முதல் உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதி ஆட்டம் நவம்பர 23-ல் (நேற்று முன்தினம்) கொழும்பு நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் நேபாளத்தை எதிர்கொண்ட இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.
தோல்வி இல்லாமல் தொடர் வெற்றி
முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 114 ரன்களை மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை எதிர்க்கொண்டு விளையாடிய இந்திய அணி 12.1 ஓவர்களிலேயே 115 ரன்களை எடுத்து, அபார வெற்றியைப் பெற்றது. மேலும் இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி தோல்வியே பெறாமல் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிர் அணியின் இந்த வெற்றி, கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமைந்தது.