ராஜஸ்தான் vs பெங்களூரு
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற 16வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூரு முதலில் பேட்டிங்
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரஜத் படிதர் 63 ரன்கள் சேர்த்தார்.
வைபவ் சூர்யவன்ஷி அதிரடி
சற்று கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி வழக்கமான தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுச்சேர்த்தார்.
மட்டையை சுழற்றிய துருவ் ஜுரல்
அவருக்கு உறுதுணையாக விக்கெட் கீப்பர் துருவ் ஜுரலும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ராஜஸ்தான் வெற்றி
இருவரின் அதிரடியான ஆட்டத்தில் 18 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி இலக்கை எட்டியது. வைபவ் சூர்யவன்ஷி 78 ரன்களும், விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் 81 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
புள்ளிப் பட்டியலில் முதலிடம்
நடப்பு சீசனில் விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வியே சந்திக்காத ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. வைபவ் சூர்யவன்ஷி இந்த ஒரு போட்டியில் மட்டும் மூன்று பெரிய சாதனைகளை படைத்தார்.
முதல் சாதனை
15 பந்துகளில் அவர் அடித்த அரைசதம் ஒரு இந்திய வீரர் அடித்த மூன்றாவது அதிவேக அரைசதம் என்கிற சாதனையை பெற்றது. இதே சாதனையை ஏற்கனவே சில நாட்கள் முன்புதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் வைபவ் படைத்திருந்தார்.
தற்போது மீண்டும் அதை நிகழ்த்தியுள்ளார். அவரின் சக வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது சாதனை
பவர்பிளேயில் அரைசதங்கள் அடிப்பதில் ஜாம்பவான் ஜோஸ் பட்லரின் சாதனையை வைபவ் சமன் செய்தார். இந்த விஷயத்தில், தனது சக தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் உட்பட நான்கு வீரர்களை வைபவ் முந்தினார்.
பவர்பிளேயில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் அதிகமாக ஜோஸ் பட்லர் 3 முறை என்ற சாதனையோடு இருந்தார். இப்போது அவருடன் வைபவ் சூர்யவன்ஷியும் 3 முறை செய்து சாதனையை சமன் செய்து இருக்கிறார்.
மூன்றாவது சாதனை
வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளுக்கும் குறைவான நேரத்தில் அதிக அரைசதங்கள் அடித்த டிராவிஸ் ஹெட் மற்றும் மெக்குர்க்கின் சாதனையை சமன் செய்தார். இது 20 பந்துகளுக்கும் குறைவான நேரத்தில் அவர் அடித்த மூன்றாவது ஐபிஎல் அரைசதமாகும்.
நிக்கோலஸ் பூரன் மற்றும் அபிஷேக் ஷர்மா தலா 4 முறையும், அவர்களுக்கு அடுத்ததாக வைபவ் சூர்யவன்ஷி இருக்கிறார்.
ஸ்ட்ரைக் ரேட் 200 ரன்கள்
இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, 266 என்ற அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டில் 200 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் ஆகியவற்றைத் தவிர, இந்தத் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேனும் இவரே.
சாதனை நாயகன் வைபவ் சூர்யவன்ஷி
இதுவரை 18 சிக்ஸர்களை அவர் விளாசியிருக்கிறார். ஐபிஎல் தொடர் நிறைவு பெறுவதற்குள் மேலும் பல சாதனைகளை வைபவ் சூர்யவன்ஷி படைப்பார் என்பதில் ஐயமில்லை.
===========