Argentina advanced to final defeating England, as Messi changed the match in the final seven minutes 
விளையாட்டு

”அந்த 7 நிமிடங்கள்” ஆட்டத்தை திருப்பிய மெஸ்ஸி : இங்கிலாந்தின் கனவு தகர்ப்பு, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா.!

உலகக்கோப்பை அரையிறுதியில் கடைசி 7 நிமிடங்களில் மெஸ்ஸி ஆட்டத்தின் போக்கை மாற்றியதால், இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா.

Kannan

இங்கிலாந்து - அர்ஜென்டினா மோதல்

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 2வது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - அர்ஜென்டினா அணிகள் மோதின.

அட்லாண்டாவின் மெர்சிடிஸ் பென்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு அணிகளும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

இங்கிலாந்து முதல் கோல்

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், போட்டியின் 55வது நிமிடத்தில் இங்கிலாந்தின் அந்தோணி கார்டன் ஒரு அருமையான கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார்.

இங்கிலாந்தின் 60 ஆண்டு கனவு

85 வது நிமிடம் வரை ஆட்டம் அப்படியே சென்றது. அர்ஜென்டினா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. அதனால் இங்கிலாந்து அணி 1966ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது.

மெஸ்ஸி நிகழ்த்திய மேஜிக்

ஆனால், 85வது நிமிடத்திற்குப் பிறகு மெஸ்ஸியின் விஸ்வரூப ஆட்டம் தொடங்கியது. 86வது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த துல்லியமான பாஸைப் பெற்று, என்சோ பெர்னாண்டஸ் தூரத்திலிருந்து ஒரு மின்னல் வேக கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

2-1 இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா

கூடுதல் நேரத்தில் (90+2 நிமிடத்தில்) மெஸ்ஸி உதைத்த துல்லியமான கிராஸ் பந்தை, மாற்று வீரராகக் களம் இறங்கிய லாடாரோ மார்டினெஸ் தலையால் முட்டி கோலாக மாற்றினார். ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மூன்று இறுதிப்போட்டிகளில் மெஸ்ஸி

இதன் மூலம், பிரேசிலின் காஃபுவிற்குப் பின் மூன்று உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் விளையாடும் 2வது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை 39 வயதான லியோனல் மெஸ்ஸி படைக்க உள்ளார்.

இறுதிப்போட்டியில் 7வது முறை

7வது முறையா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில நுழைஞ்சு இருக்கு அர்ஜென்டினா. இந்தமுறை கோப்பையை கைப்பற்றினால் அது அர்ஜென்டினாவோட 4வது உலகக்கோப்பையாக இருக்கும்.

தொடர் சாம்பியன் ஆகுமா அர்ஜென்டினா

நடப்பு சாம்பியனான அந்த அணி, இந்தமுறையும் வெற்றியை தனதாக்கினால், அது தொடர் சாம்பியன் என்ற பெருமையை பெற்றுத் தரும்.

ஸ்பெயினை எதிர்கொள்ளும் அர்ஜென்டினா

ஞாயிற்றுக்கிழமை நியூஜெர்சியில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

3வது இடம் இங்கிலாந்து - பிரான்ஸ்

தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, சனிக்கிழமை மியாமியில் நடைபெற உள்ள 3வது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸை எதிர்கொள்கிறது.

======================