Asian Games Gold Again! Indian Women Continue Kabaddi Dominance Google
விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் கபடி அணி : தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது. கபடி போட்டிகளில் நீண்டகால ஆதிக்கத்தை இந்த வெற்றி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது..

NARENDRAN K

தங்கம் வென்று அசத்திய இந்திய மகளிர் அணி :

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கபடி பிரிவில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

லீக் சுற்று முதல் இறுதிப்போட்டி வரை ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள், முக்கியமான தருணங்களில் தங்களது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் பதக்க வேட்டைக்கும் மேலும் வலுசேர்ந்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி எப்போது அறிமுகம்?

கபடி முதன்முறையாக 1982 ஆசிய விளையாட்டுப் போட்டியில் காட்சிப் போட்டியாக இடம்பெற்றது.

அதன்பிறகு 1990-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிகாரப்பூர்வ பதக்கப் போட்டியாக சேர்க்கப்பட்டது.

ஆடவர் பிரிவு 1990 முதல் இடம்பெற்று வரும் நிலையில், மகளிர் கபடி பிரிவு 2010 குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கபடியில் இந்தியாவின் பொற்காலம் :

கபடி என்றாலே இந்தியா என்ற அளவுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆடவர் பிரிவில் இந்தியா 1990, 1994, 1998, 2002, 2006, 2010, 2014 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் மட்டும் இந்திய அணி வெண்கலப் பதக்கத்துடன் திருப்தியடைந்தது.

மகளிர் அணியின் அசத்தல் சாதனை :

மகளிர் கபடி பிரிவு 2010-ல் அறிமுகமானதிலிருந்து இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

2010 மற்றும் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி, 2018-ல் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

அதன்பிறகு மீண்டும் தங்கம் வென்று தனது ஆதிக்கத்தை நிரூபித்தது. தற்போது கிடைத்துள்ள இந்த தங்கப் பதக்கம், இந்திய மகளிர் கபடி வரலாற்றில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

மொத்தம் எத்தனை தங்கம்?

ஆசிய விளையாட்டுப் போட்டி கபடி வரலாற்றில் இந்தியா இதுவரை ஆடவர் பிரிவில் 8 தங்கப் பதக்கங்களையும், மகளிர் பிரிவில் 4 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளது.

இதன் மூலம் கபடியில் மட்டும் இந்தியாவின் மொத்த தங்கப் பதக்க எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது

. இந்த சாதனை, ஆசிய அளவில் இந்தியாவின் கபடி ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது.

இந்திய விளையாட்டுக்கு கிடைத்த பெருமை :

கபடி இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டி மேடையிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சாதித்து வருகின்றனர்.

தற்போது மகளிர் அணி வென்றுள்ள தங்கப் பதக்கம், இந்திய விளையாட்டுத் துறைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

இந்த வெற்றி, நாட்டின் இளம் கபடி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தை வழங்கும் என விளையாட்டு ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

=================