முதல் போட்டியில் அசத்திய மிட்செல் ஸ்டார்க்
Australia beats England in first Ashes Test 2025 in Perth Stadium : ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 32.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில் முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 12.5 ஓவர்களில் 4 மெய்டனுடன் 58 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
இங்கிலாந்து பவுலர்கள் முன்னிலை
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுத்து ஆட முடியாமல் திண்டாடினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 39 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் அடித்திருந்தது. இங்கிலாந்தை விட ஆஸ்திரேலியா 49 ரன் பின்தங்கி இருந்தது. நாதன் லயன் (3 ரன்), பிரன்டன் டாக்கெட் (0) களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.
2வது இன்னிங்கஸ்
இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 132 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் எஞ்சிய ஒரு விக்கெட்டையும் பிரைடன் கார்ஸ் கைப்பற்றினார். பின்னர் 40 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இம்முறையும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தது. 2-வது இன்னிங்சில் வெறும் 34.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 164 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 205 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 37 ரன்களும், ஆலி போப் 33 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் பிரெண்டன் டாகெட் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பேட்டிங்கில் அணியை நிலைநிறுத்திய டிராவிஸ் ஹெட்
இதனையடுத்து 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் -ஜேக் வெதரால்ட் களம் புகுந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட சமாளித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் அடித்த நிலையில் பிரிந்தது. வெதரால்ட் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து லபுஸ்சேன் வந்தார். ஆஸ்திரேலிய அணி இம்முறை அதிரடி பாணிய கையாண்டது. இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிய டிராவிஸ் ஹெட் வெறும் 69 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவருக்கு லபுஸ்சேன் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றியை நோக்கி பயணித்தது.
ஆஸ்திரேலியா அபாரா வெற்றி
இலக்கை நெருங்கிய தருவாயில் டிராவிஸ் ஹெட் 123 ரன்களில் ஆட்டமிழ்ந்தார். அடுத்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். 2-வது இன்னிங்சில் வெறும் 28. 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 205 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லபுஸ்சேன் 51 ரன்களுடனும், ஸ்மித் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டே நாட்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்டார்க் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.