இலங்கை ஆஸ்திரேலியா மோதல்
Sri Lanka and Australia T20 World Cup Match Highlights in Tamil : ஆஸ்திரேலியா- இலங்கை அணி மோதிய குரூப் லீக் ஆட்டத்தில் இலங்கை அணி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த ஆட்டம் இலங்கையின் கண்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் 54, டிராவிஸ் ஹெட் 56, இங்கிலிஸ் 27, மேக்ஸ்வெல் 22 ரன்கள் எடுத்தனர்.
பதும் நிசாங்கா -குஷால் மெண்டிஸ் இணைந்து அசத்தல்
இதில், இலங்கை தரப்பில் ஹேமந்தா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சமீரா 2, திக்ஷனா, துனித் வெல்லலகே, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவின் சேவியர் பார்ட்லெட், ஆடம் ஸாம்பா ஆகியோர் ரன் அவுட் ஆகி விக்கெட் இழந்தனர்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை விரட்டியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குஷல் பெரேரா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பதும் நிசாங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மெண்டிஸ் 38 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சாதனைகள் படைத்த இலங்கை
அதன் பின்னர் பவன் ரத்தனநாயகே உடன் இணைந்து இலங்கை அணிக்கான வெற்றி இலக்கை அடைய செய்தார் நிசாங்கா. இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றி பெற்றது. நிசாங்கா 52 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்ஸில் 10 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சதமாக இது அமைந்தது. இந்த இலக்கை வெற்றிகரமாக எட்டியதன் மூலம் பல்வேறு சாதனைகளை இலங்கை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மங்கி உள்ளது. தற்போது ஜிம்பாப்வே அணி விளையாட உள்ள அடுத்த 2 ஆட்டங்களின் முடிவை பொறுத்தே ஆஸ்திரேலியா இந்த தொடரில் நீடிக்குமா என்பது தெரியவரும்.