Australian Open final 2026 sees Carlos Alcaraz prevail over Novak Djokovic Four Grand Slam titles in Tamil Source : Carlos Alcaraz v Tommy Paul Highlights | Australian Open 2026 Fourth Round
விளையாட்டு

நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் : கார்லோஸ் அல்காரஸ் அதிரடி!

Carlos Alcaraz AO : ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், உலகின் நம்பர் 1 வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் பட்டத்தைக் கைப்பற்றினார்.

Baala Murugan

கார்லோஸ் அல்காரஸ் சாதனை

Carlos Alcaraz Grand Slams : கார்லோஸ் அல்காரஸ் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று , கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக, பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய பட்டங்களை தலா இருமுறை வென்றிருந்தார்.

நான்கு கிராண்ஸ்லாம் பட்டங்கள்

தற்போது ஆஸ்திரேலிய ஓபனையும் வென்றதன் மூலம், டென்னிஸ் உலகின் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் கைப்பற்றிய வீரர் என்ற அரிய அங்கீகாரத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

உத்வேகத்துடன் களமிறங்கிய ஜோகோவிச்

மெல்போர்னில் நடந்த இறுதிப் போட்டியில், அல்காரஸ் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.

ஆஸ்திரேலிய ஓபனை பத்து முறை வென்ற ஜோகோவிச், மொத்தம் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன், 25வது பட்டத்தை வென்று சரித்திரம் படைக்கும் உத்வேகத்துடன் களமிறங்கினார்.

ஜோகோவிச் அதிரடி ஆட்டம்

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வெல்லாத ஜோகோவிச், இந்தப் போட்டியில் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

38 வயதிலும் அவர் சாதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

சுதாரித்த அல்காரஸ்

ஆனால், சுதாரித்துக்கொண்ட அல்காரஸ் அதிரடியாகப் அடுத்த செட்டை தன்வசப்படுத்தினார். இதனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை முறையே 6-2, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அல்காரஸ் முன்னிலை பெற்றார்.

பட்டம் வென்று 25.25 கோடி பரிசு

நான்காவது செட் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இரு வீரர்களும் மாறி மாறி கேம்களை வென்று அபாரமாகப் போராடினர்.

ஒரு கட்டத்தில் 5-5 என சமநிலை ஏற்பட்டபோது, அல்காரஸ் தனது அதிரடி ஆக்ரோஷத்தைப் பயன்படுத்தி அடுத்தடுத்து இரண்டு கேம்களை வென்று வெற்றியை தனதாக்கினார்.

இதன் மூலம், நான்காவது செட்டை அல்காரஸ் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். மொத்தம் 3 மணி 2 நிமிடம் நீடித்த இப்போட்டியில், 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அல்காரஸ் தனது முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். அவருக்கு இந்திய மதிப்பில் ₹25.25 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

==================