'Cool Captain' Mahendra Singh Dhoni and the IPL are inseparable; his achievements serve as proof of this source:thamizhalai,ai generated
விளையாட்டு

”IPL-ம், தோனியும்” : வரலாறு படைத்த சாதனைகள், மறக்க முடியாத தருணங்கள், டைம் லைனில் ஒரு பார்வை..!

கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனியையும், ஐபிஎல் கிரிக்கெட்டையும் பிரித்து பார்க்க முடியாது. காரணம் அவரது சாதனைகளை அதற்கு சான்று.

Kannan

மகேந்திர சிங் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனியின் ஐபிஎல் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.

2008ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடங்கிய அவரது ஐபிஎல் பயணம், ஏராளமான சாதனைகளையும் மறக்க முடியாத தருணங்களையும் கொண்டதாக இருந்தது. டைம்லைனில் இது குறித்து ஓர் பார்வை.

* 2008 - முதல் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் தோனியை சிஎஸ்கே அணி வாங்கியது. முதல் சீசனிலேயே அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து சுமார் 2 தசாப்தங்களாக அந்த அணியின் அடையாளமாக தோனி திகழ்ந்தார்.

* 5 முறை சாம்பியன் பட்டம்

தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் தோனியும் இணைந்தார்.

2010, 2011-ம் ஆண்டுகளில் தொடர்ந்து 2 முறை கோப்பையை வென்று, ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார்.

2010, 2014-ம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் சிஎஸ்கே அணிக்கு வென்று கொடுத்தார்.

தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 10 முறை இறுதிப் போட்டிக்கும், 12 சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியது.

இதன் மூலம் ஐபிஎல் தொடரின் நிலையான வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சிஎஸ்கே திகழ்ந்தது.

* புனே அணியில் தோனி

2013ம் ஆண்டு சூதாட்ட முறைகேடு விவகாரத்தைத் தொடர்ந்து, சிஎஸ்கே அணி 2016, 2017 ஆகிய 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் தோனி புனே அணிக்காக விளையாடினார். 2016-ல் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்டார்.

2017-ல் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அணியில் விளையாடினார். அந்த சீசனில் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் புனே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

* 2018 அசத்தலான பேட்டிங்

2 ஆண்டு தடைக்குப் பிறகு சிஎஸ்கே அணி 2018-ல் மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்கியது. அந்த சீசனில் தோனி பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மொத்தம் 455 ரன்கள் குவித்த அவர், 75.83 சராசரி மற்றும் 150.66 ஸ்டிரைக் ரேட்டைப் பதிவு செய்தார்.

அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதிகம் இடம்பெற்றிருந்ததால் ‘டாடி ஆர்மி' என்று அழைக்கப்பட்ட சிஎஸ்கே அணி, அந்த சீசனில் தனது 3-வது கோப்பையை வென்றது.

* சதம் அடிக்கா விட்டாலும் சாதனை

2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி தனது அதிகபட்ச தனிநபர் ஸ்கோரான 84 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அந்த சீசனில் அவரது பேட்டிங் சராசரி 83.20 ஆக இருந்தது.

ஐபிஎல் போட்டிகளில் சதம் அடிக்காத தோனி, 24 அரை சதங்களைப் பதிவு செய்துள்ளார்.

2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் தோனி ஒப்படைத்தார்.

ஆனால், தொடர் தோல்விகளைத் தொடர்ந்து, சீசனின் இடையிலேயே மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

2023-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கே 5-வது முறையாக கோப்பையை வென்றது.

* 250 ஐபிஎல் போட்டிகளில் தோனி

அதே ஆண்டில் ஐபிஎல் வரலாற்றில் 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையையும் தோனி படைத்தார்.

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகல்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகினார். அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

முழங்கால் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அந்த சீசனில் பெரும்பாலும் கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தோனி, ஒட்டுமொத்தமாக 73 பந்துகளில் 161 ரன்கள் குவித்தார்.

அவரது ஸ்டிரைக் ரேட் 220.54 ஆக இருந்தது. இதுவே அவரது ஐபிஎல் வாழ்க்கையில் ஒரு சீசனில் பதிவு செய்த அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் ஆகும்.

அந்த சீசனில் 14 பவுண்டரிகள், 13 சிக்ஸர்களை விளாசியதுடன், ஐபிஎல் தொடரில் 250 சிக்ஸர்களைக் கடந்தார்.

* 2025ல் மீண்டும் கேப்டனாக தோனி

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியதால், மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றார்.

இருப்பினும் அந்த சீசனில் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. ஐபிஎல் வரலாற்றில் அந்த அணி கடைசி இடத்தைப் பிடித்தது அதுவே முதல் முறையாக அமைந்திருந்தது.

2026-ல் விளையாடவில்லை

கெண்டைக்கால் மற்றும் கட்டைவிரல் காயங்கள் காரணமாக 2026-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனியால் ஒரு போட்டியில் கூட விளையாட முடியவில்லை.

இதுவே அவரது ஐபிஎல் வாழ்க்கையில் ஒரு போட்டியில்கூட விளையாடாத முதல் சீசனாக அமைந்தது.

மே 18ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே அணியின் கடைசி உள்ளூர் போட்டிக்குப் பிறகு, சக வீரர்களுடன் இணைந்து மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

* விக்கெட் கீப்பிங்கிலும் சாதனை

தனது ஐபிஎல் பயணத்தை 278 போட்டிகளில் 5,439 ரன்களுடன் தோனி நிறைவு செய்துள்ளார்.

அவரது பேட்டிங் சராசரி 38.30, ஸ்டிரைக் ரேட் 137.45 ஆகும். ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பராக அதிக முறை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற சாதனையையும் அவர் தன்வசம் வைத்துள்ளார்.

* சிஎஸ்கே அணியின் ஆலோசகர்

2008-ல் தொடங்கிய ஐபிஎல் பயணத்தில் 5 கோப்பைகள், 10 இறுதிப் போட்டிகள், பல்வேறு தனிநபர் சாதனைகள் என முத்திரை பதித்த தோனி, இனி 2027-ம் ஆண்டு முதல் ஆலோசகராகச் செயல்பட்டு இளம் வீரர்களுக்கு வழிகாட்ட உள்ளார்.

இனி, தோனியின் வழிகாட்டல் மூலம் பழைய ஃபார்முக்கு திரும்ப இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

==============