First Indian to win the Norway Chess title: Praggnanandhaa's historic achievement!
நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற 'நார்வே செஸ்' சர்வதேச தொடரில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
இதன் மூலம் இந்த மதிப்புமிக்க தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையை பிரக்ஞானந்தா தன்வசப்படுத்தியுள்ளார்.
உலகத் தரம் வாய்ந்த வீரர்களை முறியடித்த பிரக்ஞானந்தா
இந்த தொடரில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன், குகேஷ், அலிரேசா பிரோஸ்ஜா, வெஸ்லி சோ மற்றும் வின்சென்ட் கீமர் உள்ளிட்ட உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பலரும் பங்கேற்றனர்.
இத்தகைய கடுமையான சவால்களுக்கு மத்தியில்தான் தமிழகத்தை சேர்ந்த 20 வயதான இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அபாரமாக விளையாடி இமாலய சாதனையைப் படைத்துள்ளார்.
சரிவிலிருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுத்த பிரக்ஞானந்தா
தொடரின் நடுப்பகுதியில் சில முக்கிய ஆட்டங்களில் புள்ளிகளை இழந்ததால், பிரக்ஞானந்தாவின் சாம்பியன் வாய்ப்பு சற்று மங்கியது.
பிரக்ஞானந்தா: அதிரடி திருப்பம்
எனினும், ஆட்டத்தின் மிக முக்கியமான கட்டத்தில் மீண்டெழுந்த அவர், அலிரேசா பிரோஸ்ஜா, மேக்னஸ் கார்ல்சன் மற்றும் குகேஷ் ஆகியோருக்கு எதிரான கிளாசிக்கல் சுற்றுகளில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தினார்.
குறிப்பாக, 9-வது சுற்றில் குகேஷுக்கு எதிராக பெற்ற வெற்றி, அவர் கோப்பையை நோக்கி செல்வதற்கான முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இறுதி சுற்றில் வின்சென்ட் கீமரை வீழ்த்தி தனது சாம்பியன் பட்டத்தை பிரக்ஞானந்தா உறுதி செய்தார்.
கார்ல்சனை இருமுறை வீழ்த்தி அரிய சாதனை
இந்த தொடரின் மாபெரும் சிறப்பம்சமாக, உலகப் புகழ்பெற்ற வீரர் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா இரண்டு முறை தோற்கடித்தார்.
இதன் மூலம், ஒரே தொடரில் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்திற்கு அடுத்தபடியாக, இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தாபெற்றார்.
மேலும், 2026-ஆம் ஆண்டில் கிளாசிக்கல் செஸ் போட்டிகளில் கார்ல்சனை இருமுறை வீழ்த்திய உலகின் முதல் வீரர் என்ற அரிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
======