first Test match against Afghanistan, Manav Sudar bowled brilliantly, forcing the team to follow on for 152 runs google
விளையாட்டு

முதல் போட்டி ”மானவ் சுதர் அபாரம்” : 152 ரன்களுக்கு சுருண்ட, ஆப்கானிஸ்தான் ’ஃபாலோ-ஆன்’ : இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு..!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அபாரமாக பந்து வீசிய மானவ் சுதர், அந்த அணியை 152 ரன்களுக்கு ஃபாலோ ஆன் செய்ய வைத்தார்.

Kannan

இந்தியாவில் சுற்றுப் பயணம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

இந்தியா 564 ரன்கள் குவிப்பு

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 127 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசினர்.

சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பந்த் தலா 81 ரன்கள் சேர்த்தனர். வாஷிங்டன் சுந்தர் 52, மானவ் சுதர் 28, முகமது சிராஜ் 22 ரன்கள் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் தடுமாற்றம்

பின்னர் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் ஆப்கன் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்தனர்.

விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆப்கன்

அப்துல் மாலிக் 16, செதிக்குல்லா 17, குர்பாஸ் 12, ஹஸ்மத்துல்லா 20, அஃப்சர் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இன்று காலை இந்த போட்டியின் 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. மதிய உணவு நேரத்துக்கு முன்பாகவே எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் ஆப்கானிஸ்தான் இழந்தது.

6 விக்கெட்டுகளை வீழ்த்திய மானவ் சுதர்

ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா, 60 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி சார்பில் பந்து வீசிய அறிமுக வீரர் மானவ் சுதர், 22 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பிரசித் கிருஷ்ணா 3, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் எடுத்தனர்.

அறிமுக போட்டியில் அசத்திய மானவ்

இந்த நூற்றாண்டில் அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் 5+ விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது இந்திய பவுலராக மானவ் சுதர் உள்ளார்.

அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர்களில் அவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

412 ரன்கள் பின்தங்கிய ஆப்கன்

முதல் இன்னிங்ஸில் 412 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி ஆட்டமிழந்தது. இதனால் அந்த அணிக்கு ஃபாலோ-ஆன் வழங்கியது இந்திய அணி.

இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

அதன்படி தற்போது ஆப்கானிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. எனவே, இந்தப் போட்டியில் இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இரண்டாவது இன்னிங்சிலும் ஆப்கானிஸ்தன் சொற்ப ரன்களுக்கு சுருண்டால், இன்னிங்ஸ் வெற்றி பெறும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது.

=================