கபில்தேவ் என்னும் வரலாறு
kapildev speech கேப்டனாக இருக்கும் போதே இந்திய வீரர்களின் அணுகுமுறை அல்லது அணுகுமுறையின்மையை கடுமையாக விமர்சித்தவர் கபில் தேவ். 1983 உலகக் கோப்பையை வென்ற பிறகு மேற்கு இந்தியத் தீவுகள் அணி இங்கு வந்து ஆடிய போது 6 போட்டிகள் டெஸ்ட் தொடரை 3-0 என்றும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முற்றிலும் இழந்தது இந்தியா அப்போது கபில் கூறியது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது, “இந்திய வீரர்கள் பணத்திற்காகத்தான் ஆடுகிறார்கள்” என்றார்.
அப்போது அது கடும் விமர்சனங்களுக்குள்ளானது, ஆனால் சொன்னது யார்? உலகக் கோப்பையை முதன் முதலாக வென்று, இன்று இந்திய அணி வீரர்கள் இப்படி செல்வமும் செழிப்புமாக இருக்க விதையை விதைத்த கபில் தேவ். அப்படி என்றால் கருத்து ஏற்புடைதாக இருக்கும் அல்லவா, 1983 உலகக் கோப்பை வெற்றிதான் இந்தியா நெடுக ரசிகர்களை பரவலாக கிரிக்கெட் பக்கம் ஈர்த்தது, அதற்கு முதன்மையே கபில்தேவ் தான்.
கிரிக்கெட்டை வலுப்படுத்துவதற்கு செய்வதை செய்யுங்கள்
அவர் சமீபகாலமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அதாவது, புதுடெல்லியில் கோல்ஃப் போட்டித் தொடர் அறிமுக நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் பற்றி பேசிய கபில் தேவ், தனித்தனி பயிற்சியாளர்கள் தேவையா என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை.
இது போன்ற சிலவற்றை யோசித்து அதை வெளிப்படையாகச் சொல்லி என்ன நடக்க வேண்டும் என்பதில் தெளிவுடன் செயல்பட வேண்டும். கிரிக்கெட் வலுப்பெற என்ன செய்ய வேண்டுமோ அதை அவர்கள் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
அனைத்து வீரர்களும் பணத்தையே நாடுகின்றனர்
சோஷியல் மீடியா ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் விளையாட்டு வீரராக இருப்பது கடினம் என்பதை ஏற்பதற்கில்லை. ஏனெனில் எந்தக் காலத்திலும் அது கடினமாகவே இருந்துள்ளது, அல்லது அப்போது எளிதாக இருந்தது என்றால் இப்போதும் எளிதாக உள்ளது என்றுதான் கூற முடியும். அனைத்து வீரர்களும் பணத்தையே நாடுகின்றனர், நேசிக்கின்றனர். ஆனால் சில வீரர்கள் பணம்தான் மிக மிக முக்கியம் என்று கருதுகின்றனர். ஐபிஎல் விளையாடுவதை விட இந்தியாவுக்கு ஆடுவதுதான் முக்கியம் என்று நான் இப்போதும் கூறுகிறேன். ஆனால் எல்லோரும் தனிநபர்கள்தானே. அவர்களுக்கென்று சிந்தனைப் போக்கு இருக்கும். அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் வாய்க்கட்டும்.
எனக்கு எல்லாவிதமான கிரிக்கெட்டும் பிடிக்கும். வெறும் 2 பந்துகள் கொண்ட போட்டி என்றாலும் 100 பந்துகள் கொண்ட போட்டி என்றாலும், 100 ஓவர்கள் என்றாலும் 10 ஓவர்கள் என்றாலும் நான் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் பார்ப்பவன். வடிவம் என்னவாக இருந்தால் என்ன கிரிக்கெட் கிரிக்கெட்தான்.” என்று கூறிய கபில், ரோஹித் சர்மா, விராட் கோலி பற்றிய கேள்விக்கு, “குட் லக் அவர்கள் கோல்ஃபும் விளையாட வேண்டும்.” என்று மறைமுகமாக கூறி நகர்ந்தார்.