விறுவிறுப்பை கூட்டிய ஓவல் டெஸ்ட் :
India Won England By 6 Runs Fifth Test Match 2025 : இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்தியா வென்றது. பழி தீர்க்கும் விதமாக 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற, 4 போட்டி சமனில் முடிந்தது. எனவே, 5 டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடர் அவர்களின் வசமாகும், இந்தியா வெற்றி பெற்றால் தொடர் சமனாகும் என்பதால், முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.
எதிர்பார்ப்பை எகிறச் செய்த ஓவல் :
ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து அணி 247 ரன்களும் எடுத்தன. 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் எடுத்தது. 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் கண்டது. 106 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து தடுமாறிய போது இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிந்தது.
ஆட்டத்தை மாற்றிய ஜோ ரூட், ஹாரி புரூக் :
ஆனால், இதை அடித்து நொறுக்கிய ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் அபாரமாக விளையாடி 195 ரன்கள் சேர்த்தனர். இருவரும் சதம் அடித்து, சீரான இடைவெளியில் வெளியேறினர். நான்காவது நாளான நேற்று இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்து இருந்தது.
தலைக்கு மேல் தொங்கிய கத்தி :
35 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்துக்கு வெற்றி, ஒரு நாள் முழுமையாக உள்ளது. 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால், இந்தியாவுக்கு வெற்றி என்ற நிலையில், 5ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஒருமணி நேர ஆட்டம்தான் வெற்றியை தீர்மானிக்கும் என்பதால், ரசிகர்கள் திரில்லிங்கான ஆர்வத்துடன் காத்துக் கிடந்தனர்.
அதிரடியாக பந்து வீசிய இந்திய பௌலர்கள் :
சிராஜ் ஆக்ரோஷமாக பந்து வீசி ஜெமி ஸ்மித் விக்கெட்டை இரண்டு ரன்களில் கைப்பற்ற, ஜெமி ஓவர்டன் ஒன்பது ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் எல் பி டபிள்யூ ஆனார். இதேபோன்று ஜாஸ் டாங்க், பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் டக் அவுட் ஆக கடைசி விக்கெட்டுக்கு கிறிஸ் வொக்ஸ் தனது உடைந்த கையோடு பேட்டிங் செய்ய வந்தார். இதனால் இந்திய அணி வெற்றிக்கு ஒரு விக்கெட்டும் இங்கிலாந்தின் வெற்றிக்கு 17 ரன்களும் தேவைப்பட்டது. ஆட்டத்தை பார்க்க வந்த ரசிகர்கள் சீட் நுனிக்கு வந்து பெரும் ஆவலோடு ஒவ்வொரு நொடியையும் கடத்தினர்.
போராடிய அட்கின்சன், தகர்த்த சிராஜ் :
அட்கின்சன் தனி ஆளாக நின்று போராடி சிக்ஸர் அடித்தார். போட்டியில் தீப்பற்றி கொண்டது. உடைந்த கையோடு கிறிஸ் வொக்ஸ் பந்துகளை எதிர் கொள்ளக்கூடாது என்ற முனைப்புடன் அட்கின்சன் விளையாடினார். இதை உணர்ந்து கொண்ட சிராஜ் தன்னுடைய ஆக்ரோச பந்துவீச்சால் அட்கின்சன் விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து அணி 367 ரன்களில் ஆட்டம் இழந்தது. ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் 23-விக்கெட்களை வீழ்த்தி முகமது சிராஜ் முதலிடம் பிடித்தார்.
மேலும் படிக்க : ஓவல் மைதானத்தில் கடைசி டெஸ்ட்: சமன் செய்யும் கட்டாயத்தில் இந்தியா
இந்தியா வரலாற்று வெற்றி :
இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வரலாற்று வெற்றியை(India Wins England 5th Test Match 2025) பெற்றிருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் ஆனது. சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். விராட் கோலி,ரோகித் சர்மா, அஸ்வின், முகமது சமி உள்ளிட்ட எந்த வீரர்களும் இல்லாமல் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களம் இறங்கி சாதனை படைத்திருக்கிறது.
======