இந்தியா - இலங்கை டி20
Smriti Mandhana becomes fourth woman to 10,000 runs in international Cricket : இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த நான்காவது வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா
திருவனந்தபுரத்தில் இலங்கை - இந்தியா இடையேயான 4வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 10,000 ரன்கள் என்ற இலக்கை எட்ட 27 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினார்.
உலகின் 4வது வீராங்கனை
அபாரமாக விளையாடிய அவர், இந்த ரன்களைக் கடந்து புதிய சரித்திரம் படைத்தார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த உலகின் 4வது வீராங்கனை மற்றும் 2வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
முந்தைய சாதனை
இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் மிதாலி ராஜ், இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ், நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் ஆகியோர் மட்டுமே மகளிர் கிரிக்கட்டில் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
சாதனையாளர் ஸ்மிருதி மந்தனா
இலங்கைக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய ஸ்மிருதி மந்தனா, தொடர்ந்து பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். இதே தொடரின் முதல் போட்டியிலேயே டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருந்தார்.
ஸ்மிருதி மந்தனா உலக சாதனை
2025ல் ஒருநாள் கிரிக்கெட்டில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைச் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் போது படைத்தார். 2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு இவரது சிறப்பான பேட்டிங் முக்கியக் காரணமாக அமைந்தது.
10,000 ரன்கள் கிளப்பில் மந்தனா
தற்போது 10,000 ரன்களை கடந்ததன் மூலம், 10,000 ரன்கள் கிளப்பில் இணைந்தார் ஸ்மிருதி மந்தனா. மேலும் இந்த சாதனையை 279 இன்னிங்ஸில் நிகழ்த்தி இருக்கிறார். அதன் வாயிலாக சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் வேகமாக 10000 ரன்கள் அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையையும் மந்தனா நிகழ்த்தியுள்ளார்.
சாதனைப் பட்டியல் (இன்னிங்ஸ்) :
1. ஸ்மிரிதி மந்தனா (இந்தியா ): 279
2. மித்தாலி ராஜ் (இந்தியா) : 291
3. சார்லட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து ): 308
4. சுசி பேட்ஸ் (நியூஸிலாந்து) : 314
======