இந்தியா - பாகிஸ்தான் மோதல்
டி20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா மற்றும் இலங்கையில் ஆட்டங்கள் நடந்து வருகின்னற. இலங்கையின் கொழும்புவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பரம எதிரிகளாக இந்தியாவும் - பாகிஸ்தானும் மோதுகின்றன.
அரசியல் காரணங்கள்
இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தனியாக எந்த தொடர்களில் விளையாடுவது இல்லை.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போட்டிகளில் மட்டும் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவதால் இந்தப் போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னிலையில் இந்தியா
குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளன. நடப்பு சாம்பியனான இந்தியா குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது.
ஹாட்ரிக் வெற்றி - யாருக்கு?
இவ்விரு அணிகளும் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய ஆர்வமாக உள்ளன.
கொழும்புவின் கெத்தாரமா பகுதியில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில், ஞாயிற்றுக்கிழமையான இன்று வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலை நிலவும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
கொழும்புவில் மழைக்கு வாய்ப்பு
வெப்பநிலை சுமார் 30° முதல் 31°C வரை இருக்கும். இருப்பினும், மதியம் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக்கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று மாலை கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக இலங்கை வானிலை மையம் கூறியுள்ளது.
வருண பகவான் கருணை காட்டுவாரா?
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மழை பெய்யலாம்.
இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்படலாம் அல்லது போட்டியின் நேரம் குறைக்கப்படலாம்.
அதிநவீன வடிகால் வசதி
மேகமூட்டம் இருந்தாலும், இரவு 8 மணிக்கு பிறகு நிலைமை மேம்படும்.
மைதானத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற பிரேமதாசா மைதானத்தில் அதிநவீன வடிகால் அமைப்பு மற்றும் சிறப்பு ஊழியர்கள் தயாராக உள்ளனர்.
நீரை விரைவாக வெளியேற்றலாம்
மேலும் பிட்சை மட்டும் மூடும் பல சர்வதேச மைதானங்களைப் போல இல்லாமல், பிரேமதாசா மைதானத்தில் விளையாட்டு மைதானம் முழுவதையும் பாதுகாக்க போதுமான கவர்கள் உள்ளன. இதனால் மழை நீரை விரைவாக வெளியேற்ற முடியும்.
டி20 உலகக் கோப்பையில் இலங்கையில் நடந்த எந்த போட்டியும் மோசமான வானிலையால் பாதிக்கப்படவில்லை.
இருப்பினும் சில போட்டிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருந்தது. ஆனால் போட்டி முடிந்த பிறகே மழை பெய்ததால் பாதிப்பு இல்லை.
ரசிகர்கள் பிரார்த்தனை
பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்தப் போட்டி, மழையின் பாதிப்பு இல்லாமல் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
=====================