அஜிங்க்யா ரஹானே
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளா நீடித்த அவரது கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான வீடியோவை பகிர்ந்து, இந்த முடிவை ரஹானே உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
"சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து வடிவங்களிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்க சரியான நேரம் இது என்று உணர்கிறேன். சிறுவயதில் பயிற்சிக்கு மட்டும் பயணம் செய்த அந்த ஆரம்ப நாட்களில் இருந்து, இந்த விளையாட்டுக்கு நான் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இன்னிங்ஸிலும், பேட்டிங் செய்ய கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும், இந்திய தொப்பியை அணிய வேண்டும் என்பதுதான் எப்போதும் கனவாக இருந்தது" என்று கூறினார்.
நேர்மையாக விளையாடினேன்
ரஹானே தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எப்போதும் நாட்டிற்கும் அணிக்கும் முன்னுரிமை அளித்ததாகவும், நேர்மையுடன் விளையாடியதாகவும் கூறினார். "நான் ஒரு எளிய விதியைக் கடைப்பிடித்தேன். எப்போதும் என் நாட்டையும் என் அணியையும் எனக்கு முன்னால் வைத்தேன்.
விளையாட்டு என்னை கவனித்து கொண்டது
இந்த விளையாட்டை நான் முழு நேர்மையுடன் விளையாடினேன். உங்கள் நோக்கம் சரியாக இருந்தால், விளையாட்டு எப்போதும் உங்களைக் கவனித்துக் கொள்ளும் என்று நான் எப்போதும் நம்பினேன்" என்றும் தெரிவித்தார்.
அனைவருக்கும் நன்றி
ரஹானே தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவளித்த பிசிசிஐ, மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA), தனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், ஐபிஎல் அணிகள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
"உயர்வு தாழ்வு என அனைத்திலும் எனக்கு ஆதரவளித்த அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு சிறப்பு நன்றி.
ரசிகர்கள் இதயங்களில் நான் தோற்கவில்லை
'அஜிங்க்யா' என்றால் வெல்ல முடியாதவன் என்று அர்த்தம், ஆனால் கிரிக்கெட் எனக்கு பலமுறை தோல்வியைக் காட்டியுள்ளது. கிரிக்கெட் வீரர்களாக, நாங்கள் வெற்றி பெறுவதை விட அடிக்கடி தோல்வியடைகிறோம்.
நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படாத ஒரு இடம் உண்டு. அது உங்கள் இதயங்களில்தான். உங்கள் அன்புக்கும், நம்பிக்கைக்கும், ஆதரவுக்கும் நன்றி. கேப் எண் 278, விடைபெறுகிறேன்" என்று ரஹானே முடித்தார்.
85 போட்டிகள், 144 இன்னிங்ஸ்கள்
சர்வதேச போட்டிகளில் ரஹானே பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். 85 போட்டிகளில் 144 இன்னிங்ஸ்களில் விளையாடி, 38.46 சராசரியில் 5,077 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 12 சதங்களும் 26 அரைசதங்களும் அடங்கும்.
ஒருநாள் போட்டிகளில், 90 போட்டிகளில் 87 இன்னிங்ஸ்களில் விளையாடி, 35.26 சராசரியில் 2,962 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதங்களும் 24 அரைசதங்களும் அடங்கும். டி20 போட்டிகளில், 20 போட்டிகளில் 375 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சூப்பர் கேப்டன்
டெஸ்ட் கேப்டனாக ரஹானேவின் சாதனை சிறப்பாக உள்ளது. அவர் தலைமையில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை.
நான்கு வெற்றிகள், இரண்டு டிராக்களுடன், குறைந்தபட்சம் ஐந்து போட்டிகளில் கேப்டனாக இருந்த இந்திய வீரர்களில் அதிக வெற்றி சதவீதத்தை ரஹானே கொண்டுள்ளார்.
2020-21 பார்டர்-கவாஸ்கர் டிராபியில், மெல்போர்னில் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றி மற்றும் கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் நீண்ட கால வெற்றிப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது மறக்க முடியாத தருணங்கள்.
============