FIDE மகளிர் உலகக் கோப்பை :
Divya Deshmukh vs Koneru Humpy Chess Final : ஜார்ஜியாவில் FIDE மகளிர் உலகக் கோப்பைக்கான போட்டி நடைபெற்று வருகிறது. அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள் கோனேரு ஹம்பி - திவ்யா தேஷ்முக் சாதனை படைத்தனர். அரையிறுதிக்கு இந்தியா முன்னேறுவது இதுவே முதல்முறை. அனுபவ வீராங்கனை கோனேரு ஹம்பியும் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தனர். இந்த வெற்றியின் மூலம், இருவரும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மதிப்புமிக்க கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
சாதித்த இந்திய வீராங்கனைகள் :
உலகத் தரவரிசையில் 18வது இடத்திலுள்ள, திவ்யா(Divya Deshmukh), 8ம் இடத்தில் உள்ள சீனாவின் வலிமையான, முன்னாள் உலக சாம்பியன், ஜோங்இயை சந்தித்தார். முதல் போட்டி 'டிரா' ஆக, 2வது போட்டியில் திவ்யா வெற்றி பெற்றார். இதன் மூலம் உலக செஸ் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில், சீனாவின் லெய் டிங்ஜியை டைபிரேக்கரில் வீழ்த்தி கோனேரு ஹம்பி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இது இந்திய செஸ் விளையாட்டுக்கு கிடைத்த இரட்டை வெற்றியாகும். இந்த இறுதிப் போட்டி, ஒரு தலைமுறை யுத்தம் என்றே வர்ணிக்கப்படுகிறது.
வரலாறு படைக்கிறது இந்திய செஸ் அணி :
அனுபவ வீராங்கனையான 38 வயது கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பி, இளம் புயல் திவ்யா தேஷ்முக்கை இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார். கோனேரு ஹம்பி, உலக ரேபிட் சாம்பியன் பட்டம் உட்பட பல பட்டங்களை வென்றிருந்தாலும், உலகக் கோப்பை மட்டும் அவருக்கு எட்டாக்கனியாக இருந்து வந்தது. இப்போது முதல்முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி, அந்த குறையையும் போக்கக் காத்திருக்கிறார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டிக்காக ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்தியாவுக்கு வெற்றிக் கோப்பை :
இந்தப் போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் அது இந்தியாவுக்கு கிடைக்கப் போகும் வெற்றிதான். இது நாட்டிற்கு பெருமை தேடித் தரும் தருணமாகும். யார் கைக்கு சாம்பியன் கோப்பை வரப்போகிறது என்பது மட்டுமே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
=====