மவுசு கூடும் டி.20 கிரிக்கெட் போட்டிகள் :
5 Balls 5 Wickets in Ireland T20 League 2025 : ஒருநாள் போட்டிகளுக்கு மவுசு குறைந்து டி.20 போட்டிகள் வரவேற்பை பெற்று வருகின்றன. குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவிப்பது. 20 ஓவர்களில் இமாலய இலக்குகளை எட்டுவது என டி.20 போட்டிகளை காண கூட்டம் திரள்கிறது. இதனால், கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் டி.20 தொடர்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
அயர்லாந்தில் டி.20 போட்டிகள் :
அந்தவகையில், அயர்லாந்தில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று(Ireland T20 League 2025) வருகிறது. டப்ளின் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் கர்டிஸ் கேம்பர் 44 ரன்கள் விளாசினார்.
5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் :
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நார்த்வெஸ்ட் வாரியர்ஸ் அணி 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. 12ஆவது ஓவரை கர்டிஸ் கேம்பர் வீசிய நிலையில், கடைசி 2 பந்துகளில் வில்சன், கிரஹாம் ஆகியோரை அவுட்டாக்கினார். மீண்டும் 14ஆவது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்தில் மெக்பிரைனை அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 2 மற்றும் 3 ஆவது பந்தில் மில்லர், ஜோஸ் ஆகியோரை அவுட்டாக்கினார்.
கர்டிஸ் கேம்பர் உலக சாதனை :
இதன்மூலம், ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்(5 Balls 5 Wickets) சாய்த்த முதல் வீரர் என்ற சாதனையை அயர்லாந்து வீரர் கர்டிஸ் கேம்பர்(Curtis Camper) படைத்துள்ளார்.
=====