தனது உருவசிலையை திறந்து வைத்த ஜாம்பவான் மெஸ்ஸி
Lionel Messi arrives in Kolkata for India tour : அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் 'பிபா' உலக கோப்பை வென்றது. இதையடுத்து, 'இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார் மெஸ்ஸி. நீண்ட கால கிளப் அணி நண்பர், உருகுவேயின் லுாயிஸ் சாரஸ், அர்ஜென்டினா அணி மத்தியகள வீரர் ரோட்ரிகோ டி பால் என மூன்று பேருடன் வந்தனர். இந்நிலையில் கோல்கட்டா சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 70அடி உயர தனது உருவச்சிலையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.
மெஸ்ஸியுடன் கால்பந்து விளையாடவுள்ள ரேவந்த் ரெட்டி
இவரின் வருகையை ஒட்டி சால்ட் லேக் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மெஸ்ஸியின் வகையை கண்டு உற்சாகம் அடைந்து ஆரவாரம் செய்தனர். முன்னதாக, இன்று அதிகாலை கோல்கட்டா விமான நிலையத்தில், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மதியம் 2:00 மணிக்கு மெஸ்ஸி ஐதராபாத் செல்கிறார். நட்பு போட்டி ரத்தானதால், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, உள்ளிட்ட தலா 7 பேர் பங்கேற்கும் காட்சி போட்டியில் விளையாடுகிறார்.
மோடியை சந்திக்கும் மெஸ்ஸி
இதைத்தொடர்ந்து மும்பை செல்லவுள்ள அவர், மாலை 5:00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இரவில் 45 நிமிடம் 'பேஷன்' நிகழ்வு நடக்கும். இதில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் இதையும் அவர் பார்வையிடவுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.மூன்றாவது நாள் நாளை மறுநாள் (டிச. 15), டில்லி செல்லும் மெஸ்ஸி, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெஸ்ஸியின் இந்தியா வருகையை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் இவரைகாண நேரில் காத்திருந்த ரசிகர்கள் மைதானத்தில் தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். நீண்ட நேரம் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், மெஸ்ஸி உடனடியாக சென்று விட்டதால், ரசிகர்கள் அதிருப்திக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.