Mexico team impressed by defeating South Africa in the opening match of the World Cup football google
விளையாட்டு

FIFA Worldcup : முதல் போட்டியில் 3 red cards : தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய மெக்சிகோ : கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்...!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிகாவை தோற்கடித்து அசத்தி இருக்கிறது மெக்சிகோ அணி.

Kannan

உலகக்கோப்பை கால்பந்து தொடர்

உலகக்கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. உலகக் கோப்பை வரலாற்றிலேயே 48 அணிகள் பங்கேற்கும் மிகப்பெரிய தொடரின் முதல் போட்டியாக அமைந்து இருக்கிறது.

மெக்சிகோ vs தென்னாப்பிரிக்கா

தொடரை இணைந்து நடத்தும் மெக்சிகோ அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டது.

மெக்சிகோ நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அஸ்டெகா மைதானத்தில் இந்த ஆட்டம் நடந்தது.

ஜூலியன் குயினோனஸ் முதல் கோல்

80 ஆயிரம் ரசிகர்களின் ஆரவாரங்களுக்கிடையே மெக்சிகோ ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கி ஒன்பது நிமிடங்களுக்குள் ஜூலியன் குயினோனஸ் அடித்த கோல் மூலம் மெக்சிகோ முன்னிலை பெற்றது.

சவுதி லீக்கில் இந்த சீசனில் அதிக கோல்கள் அடித்திருந்த குயினோனஸ், தென் ஆப்பிரிக்க கோல்கீப்பர் ரோன்வென் வில்லியம்ஸின் கால்களுக்கு இடையே பந்தை செலுத்தி உலகக் கோப்பையின் முதல் கோலை அடித்து அசத்தினார்.

2006ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையில் ஜெர்மனிக்காக பிலிப் லாம் ஆறாவது நிமிடத்தில் கோல் அடித்த பிறகு, தொடக்கப் போட்டியில் அடிக்கப்பட்ட மிக விரைவான கோலாக இது அமைந்தது.

தென்னாப்பிரிக்கா வீரருக்கு ரெட் கார்டு

இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்பெபெலோ “யாயா” சித்தோலே, கோல் அடிக்கும் வாய்ப்பில் இருந்த மெக்சிகோ வீரர் பிரையன் குட்டியெரஸை தடுப்பதற்காக கீழே தள்ளியதால் நேரடியாக சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

இதனால் 10 வீரர்களுடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா மேலும் அழுத்தத்துக்கு உள்ளானது.

2வது கோல் அடித்த ரவுல் ஜிமெனேஸ்

இதனைத் தொடர்ந்து அனுபவம் மிக்க மெக்சிகோ முன்னணி வீரர் ரவுல் ஜிமெனேஸ், இரண்டாவது பாதியின் நடுப்பகுதியில் கோலுக்கு அருகில் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார். சர்வதேசப் போட்டிகளில் ஜிமெனேஸ் அடிக்கும் 46-வது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் மெக்சிகோ அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் ஜாரெட் போர்கெட்டியுடன் இணைந்து இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

17 வயது இளம் வீரர்

இந்தப் போட்டியில் 17 வயது 240 நாட்களே ஆன இளம் வீரர் கில்பெர்டோ மோராவை மெக்சிகோ உலகக் கோப்பை அறிமுக வீரராக களமிறக்கியது.

இதன்மூலம் உலகக் கோப்பையில் விளையாடிய இளம் மெக்சிகோ வீரராகவும், போட்டி வரலாற்றில் ஆறாவது இளம் வீரராகவும் அவர் சாதனை படைத்தார்.

போட்டியில் ஒழுங்கீனம், சிவப்பு அட்டை

தென் ஆப்பிரிக்காவின் தெம்பா ஸ்வானே, ரொபெர்டோ அல்வராடோவின் முகத்தில் தாக்கியதற்காக விஏஆர் பரிசீலனைக்குப் பிறகு சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

இதனால் தென்னாப்பிரிக்கா ஒன்பது வீரர்களுடன் மட்டுமே போட்டியை முடித்தது.

உலகக் கோப்பை போட்டி ஒன்றில் ஒரே அணி இரண்டு சிவப்பு அட்டைகள் பெற்றது 2006ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதன்முறை.

முதல் போட்டியில் மூன்று சிவப்பு அட்டை

கூடுதல் நேரத்தில் மெக்சிகோ வீரர் செசார் மொண்டெஸுக்கும் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இதனால் உலகக் கோப்பை தொடர் தொடங்கிய முதல் போட்டியிலேயே மொத்தம் மூன்று சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டன.

மெக்சிகோ வெற்றி

இந்த வெற்றியின் மூலம் ‘ஏ’ பிரிவில் மெக்சிகோ மூன்று புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்ததாக 18ம் தேதி தென் கொரியாவை மெக்சிகோ எதிர்கொள்கிறது.

======================