இந்தியாவின் நட்சத்திர பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பல பதக்கங்கள் இருந்தாலும், ஆசிய விளையாட்டுப் பதக்கம் மட்டும் நீண்ட காலமாக எட்டாக்கனியாகவே இருந்தது.
அவர் முதன்முறையாக 2014 இஞ்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் 9-வது இடத்தை பிடித்தார்.
பின்னர் 2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியை காயம் காரணமாக தவறவிட்டார்.
2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டில் பதக்கத்தை நெருங்கிய அவர், 49 கிலோ எடைப்பிரிவில் 4-வது இடத்தைப் பெற்று ஏமாற்றமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய மீராபாய் சானு, ஸ்நாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு மொத்தம் 198 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
போட்டி முழுவதும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்ட அவர், இந்தியாவின் பதக்க எண்ணிக்கையிலும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம், உலக சாம்பியன்ஷிப் தங்கம், காமன்வெல்த் போட்டிகளில் பல பதக்கங்கள் என ஏற்கனவே பல்வேறு சாதனைகளை படைத்துள்ள மீராபாய் சானுவுக்கு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வது நீண்டநாள் இலக்காக இருந்தது.
அந்த இலக்கை 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் நிறைவேற்றியுள்ளார்.
பளுதூக்குதல் பிரிவில் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வது 28 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது.
இதற்கு முன்பு 1998 ஆசிய விளையாட்டில் கர்ணம் மல்லேஸ்வரி இந்தியாவுக்கு பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.
தற்போது அந்த வரிசையில் மீராபாய் சானுவும் இணைந்துள்ளார்.
மீராபாய் சானுவின் வெற்றிக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாக அவரது சாதனை பாராட்டப்படுகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்று வருகின்றனர்.
அந்த வரிசையில் மீராபாய் சானுவின் வெள்ளிப் பதக்கமும் இந்திய அணியின் உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
வரவிருக்கும் போட்டிகளிலும் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
=====================