Sharmila Dhankhar made history by winning India's first gold medal in the Commonwealth Para-athletics  AI generated
விளையாட்டு

CWG 2026: ”ஒரே நாளில் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள்” : பாரா தடகளத்தில் ஷர்மிளா தன்கர் தங்கம் : உயரம் தாண்டுதலில் வெள்ளி!

காமன்வெல்த் பாரா தடகள பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார் ஷர்மிளா தன்கர்.

Kannan

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்

கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 5வது நாளான நேற்று இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வாரிக்குவித்து அசத்தியுள்ளது.

இந்தியாவின் பதக்க வேட்டை

இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 தங்கம் அடங்கும்.

ஷர்மிளா தன்கர் சாதனை

மிகப்பெரிய சாதனையாக, மகளிர் குண்டு எறிதல் எஃப்57 பிரிவில் இந்திய வீராங்கனை ஷர்மிளா தன்கர் 9.81 மீட்டர் தூரம் குண்டு எறிந்து வரலாற்றுச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

காமன்வெல்த் போட்டிகளின் பாரா தடகள பிரிவில் இந்தியா வெல்லும் முதல் தங்கம் இதுவாகும். மேலும், காமன்வெல்த் பாரா தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

ஷில்பா வெண்கலம்

இதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை ஷில்பா வெண்கலப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் வரலாற்றில் ஒரே பாரா தடகளப் போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

சர்வேஷ் அனில் குஷாரே வெள்ளி

ஆண்கள் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் அனில் குஷாரே வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரும் ஜமைக்காவின் ரொமைன் பெக்ஃபோர்டும் 2.28 மீட்டர் உயரத்தைக் தாண்டத் தவறிய நிலையில், முந்தைய சுற்றுகளின் அடிப்படையில் சர்வேஷுக்கு வெள்ளி கிடைத்தது.

அஜய் பாபு வெள்ளி

ஆண்கள் 79 கிலோ பளுதூக்குதலில் வல்லுரு அஜய் பாபு 330 கிலோ எடையை தூக்கி நூலிழப்பில் தங்கத்தை இழந்து வெள்ளி வென்றார். இவரது தந்தை ஸ்ரீனிவாச ராவ் 2010 டெல்லி காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார்.

வீராங்கனைகள் அசத்தல்

பெண்கள் 53 கிலோ பளுதூக்குதலில் ஞானேஸ்வரி தேவி வெள்ளியும், பெண்கள் 58 கிலோ பளுதூக்குதலில் பிந்தியாராணி தேவி வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர்.

ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்று அசத்தியுள்ள இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

================