வியான் முல்டர் முச்சதம் :
ஜிம்பாப்வே - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வியான் முல்டர் முச்சதம் அடித்து சாதனை படைத்தார்.
முதல்நாள் ஆட்டத்தில் வியான் முல்டர் 259 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 34 பவுண்டரிகளுடன் 264 ரன்கள் எடுத்து இருந்தார். 2ம் நாள் ஆட்டத்தில் அவர், முச்சதம் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக முச்சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
டெஸ்ட்டில் முச்சதம் அடித்த சாதனையாளர்கள் :
இந்தியாவின் வீரேந்திர சேவக் 2008ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 278 பந்துகளில் முச்சதம் அடித்து சாதனை படைத்து முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த 2வது தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் பெற்றார் வியான் முல்டர். இதற்கு முன்னர் ஹசிம் ஆம்லா முச்சதம் அடித்திக்கிறார்.
ரன்களை குவித்த தென்னாப்பிரிக்கா :
தென்னாப்பிரிக்க அணி 114 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 626 ரன்கள் குவித்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. வியான் முல்டர் 334 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 49 பவுண்டரிகளுடன் 367 ரன்களை எடுத்து இருந்தார்.
367 ரன்கள் விளாசியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை வியான் முல்டர் நிகழ்த்தினார்.
பிரையன் லாராவின் சாதனை :
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பிரையன் லாரா விளாசிய 400 ரன்களே இதுவரை ஓர் இன்னிங்ஸில் விளாசப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்து வருகிறது. இந்த சாதனையை முறியடிக்க வியான் முல்டருக்கு 34 ரன்களே தேவையாக இருந்தன.
சாதனையை தாண்டாத வியான் முல்டர் :
ஆனால் அவர், சாதனையை கருத்தில் கொள்ளாமல் டிக்ளேர் முடிவை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்த வகையில், ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் வியான் முல்டர் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
சாதனையாளர்களாக நிற்கும் பேட்ஸ்மேன்கள் :
400 ரன்களுடன் பிரையன் லாரா, 380 ரன்களுடன் மேத்யூ ஹைடன், 375 ரன்களுடன் பிரையன் லாரா, 374 ரன்களுடன் ஜெயவர்த்தனே முதல் 4 இடங்களில் உள்ளனர். உலக சாதனை படைக்க வாய்ப்பு இருந்தும், டிக்ளேர் செய்தது பற்றி வியான் முல்டர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
லாராதான் ஜாம்பவான் :
“ஆட்டத்தில் நாங்கள் போதுமான ரன்கள் எடுத்திருந்தோம். நாங்கள் பந்து வீச வேண்டும் என நினைத்தேன். பிரையன் லாரா ஜாம்பவான். அந்த சாதனையை தன்வசம் வைத்துக்கொள்ள அவர் தகுதியானவர். மற்றொரு முறை எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தாலும் நிச்சயம் லாராவின் ஸ்கோரை மிஞ்ச மாட்டேன். மீண்டும் இதையேதான் செய்வேன்” என வியான் முல்டர் தெரிவித்தார்.
400-ஐ தொடவே மாட்டேன் :
கிரிக்கெட் ஜாம்பவானான பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வியான் முல்டரின் இந்தச் செயல், உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
=====