சாதித்த இந்திய மகளிர் அணி
Shafali Varma, Deepti Sharma lead India to maiden World Cup glory : மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி, அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதன்முறையாக கோப்பையை வென்று சாதித்து இருக்கிறது.
அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஷெஃபாலி வர்மா 78 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 87 ரன்களை விளாசினார். முக்கியமாக, 45 ரன்கள் விளாசிய ஸ்மிருதி மந்தனாவுடன் முதல் விக்கெட்டுக்காக 18 ஓவர்களில் 104 ரன்கள் கூட்டணி மூலம் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார். அரையிறுதி ஆட்டத்தில் அசத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழக்க, கவுர் 20 ரன்களில் வெளியேறினார். ஆனால் தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் இருவரும் கடைசியில் விளாசித் தள்ளி ஸ்கோரை 298 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.
இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்கா
299 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்க அணி விரட்டியபோது அந்த அணியின் கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான லாரா வோல்வார்ட் தான் ஒரு போராளி சிங்கம் என்பதை நிரூபித்து 98 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்ஸருடன் 101 ரன்கள் எடுத்து மிரட்டினார். தீப்தி ஷர்மாவின் அருமையான பந்து வீச்சில், அமன்ஜோத் கவுர் அருமையாக கேட்ச் பிடிக்க அவரது ஆட்டம் முடிந்து, தென் ஆப்பிரிக்காவின் கோப்பை கனவும் தகர்ந்தது.
5 விக்கெட்டுகளை சாய்த்த தீப்தி ஷர்மா
கடைசி 5 விக்கெட்டுகளை 37 ரன்களுக்கு இழந்தது தென் ஆப்பிரிக்கா. தீப்தி ஷர்மா 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்த்து அட்டகாசமான பவுலிங்கினால் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். ஷெஃபாலி வர்மா தன் ஆல்ரவுண்ட் செயல்திறனுக்காக ஆட்ட நாயகி விருதையும், தீப்தி ஷர்மா தொடர் நாயகி விருதையும் தட்டிச் சென்றனர்.
கேப்டனின் மாஸ்டர் ஸ்ட்ரோக்
இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் உள்ளுணர்வினால் ஷெஃபாலிக்கு பவுலிங் கொடுத்தது மாஸ்டர் ஸ்ட்ரோக் எனலாம். இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஷெஃபாலி 30 ஓவர்களையே வீசியிருக்கிறார். ஆனால், வந்தவுடனேயே தென் ஆப்பிரிக்காவின் முக்கியக் கூட்டணியான வோல்வார்ட் - சுனே கூட்டணியை உடைத்தார்.
தென் ஆப்பிரிக்காவை உடைத்த ஷெஃபாலி
அந்த இருவருக்கும் 52 ரன்கள் கூட்டணி என்று கொஞ்சம் தென் ஆப்பிரிக்கா பலமாகவே சென்று கொண்டிருந்தது. அப்போது அருமையான ரிட்டர்ன் கேட்ச் மூலம் சுனே லஸ்சை 21-வது ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பினார் ஷெஃபாலி வர்மா. பிறகு 2-வது ஓவரின் முதல் பந்திலேயே மரிசான் காப்-ஐ லெக் திசையில் எட்ஜ் கேட்ச் மூலம் வீழ்த்தினார் ஷெஃபாலி.
ஷெஃபாலியை புகழ்ந்த கேப்டன் கவுர்
” லாராவும் சுனேவும் பேட் செய்தபோது தென் ஆப்பிரிக்க அணி நன்றாகவே இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. இன்று ஷெஃபாலியின் தினம் என்பதால், அவரையே பந்து வீச அழைத்தேன். அதுவே வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்து, கோப்பையை பெற்றுக் கொடுத்தது” என்றார் கேப்டன் கவுர்.
ஆட்ட நாயகி விருது வென்ற ஷெஃபாலி
இந்திய அணிக்குள் ஷெஃபாலி வர்மா அரையிறுதிக்கு முன்பாகத்தான் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். பிரதிகா ராவல் காயமடைந்ததால் ரீப்ளேஸ்மெண்ட் ஆக வந்து, இறுதிப் போட்டியில் கலக்கி ஆட்ட நாயகி விருது வென்று மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றார் ஷெஃபாலி வர்மா.
================